சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவிகளை வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட செயற்பாடுகளை இலங்கை விரைவில் ஆரம்பிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
மேற்படி செயற்பாடுகள் நாட்டின் வணிகச் செயற்பாடுகளை இலகுபடுத்துவது தொடர்பான மதிப்பீடுகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல் போன்ற விடயங்கள் மீது நேரடியாக தாக்கம் செலுத்தும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நுவரெலியா கிரேண்ட ஹோட்டலில் நேற்று (03) நடைபெற்ற சட்டத்தரணிகள் மாநாட்டின் 2 ஆம் நாள் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“பொருளாதாரத்தை வழமைக்கு திருப்பும் முயற்சிகளில் நீதிக் கட்டமைப்பின் பணியும் வணிக நிலைத்தன்மையும்” என்ற தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்று வரும் மேற்படி
மாநாடு இன்று (04) நிறைவடையவுள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவிகளை வழங்குவதை தடுப்பதற்காக காணப்படும் சட்டதிட்டங்களின் இடைவெளிகளை விரைவில் கண்டறிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அவ்வாறு
செய்யத் தவறும் பட்சத்தில் இலங்கை மூலோபாய குறைபாடுகள் கொண்ட நாடாக பட்டியலிடப்படலாம் என்றும் அதனால் நாட்டின் அபிவிருத்திக்கு பாதகமான விளைவுகள்
ஏற்படலாம் என்றும் அறிவுருத்தினார்.
தேசிய கொள்கையொன்றின் கீழ் நாட்டை வழிநடத்திச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும் இதன் போது வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேசிய கொள்கை வகுப்பதற்கான குழுவை நியமிக்கும் பணிகள் தற்போதும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தேசிய கொள்கை வகுப்புச் செயற்பாடுகளின் போது அனைத்து தரப்பினரதும் இணக்கப்பாடுகளை பெற்றுக்கொள்ள முடியாதிருந்தாலும், மேற்படி விடயங்கள் குறித்து உடன்பாடு ஒன்றை உருவாக்கி அவற்றை அமுல்படுத்துவதற்கான முனைப்புக்களை மேற்கொள்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னயை அரசாங்கங்கள் தேசிய கொள்கை ஒன்றை வகுக்கத் தவறியதன் காரணமாகவே இன்றளவில் நாட்டின் பிரச்சினைகள் உக்கிரமடைந்துள்ளன என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இங்கு கருத்து தெரிவித்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌஷல்ய நவரத்ன, இந்த மாநாட்டின் வாயிலாக நீதித் துறையினர், கொள்கை தயாரிப்பாளர்கள், அதிகாரிகள் மற்றும் வியாபாரத் துறையினர் மத்தியிலான கருத்தாடல் ஒன்றை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.
அத்தோடு ஒரு தேசமாக நாம் முன்னேற வேண்டுமானால், சட்டத்துறை தொழில்முனைவின் முக்கியத்துவத்தை அடையாளம் காண்பது முக்கியம். மேலும், தொழில் மற்றும் தொழில்முனைவோர், சட்டத்தின் ஆட்சியை ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சுதந்திரம் பெற்றதிலிருந்து 75 வருடங்களின் பின்னர் அபிவிருத்தி அடைந்த இலங்கை தொடர்பிலான எதிர்பார்ப்புகள் தற்போது முதல் முறையாக ஏற்பட்டுள்ளதென தெரிவித்த தேசிய சட்டத்தரணிகள் சம்மேளனத்தின் தலைவர் பைசர் முஸ்தபா யுத்தம் மற்றும் தவறான பொருளாதார கொள்கைகள் என்பனவே பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தியது என்றும் தெரிவித்தார்.
அதனால் கடந்த கால தவறுகளை திருத்திக்கொண்டு எதிர்கால சவால்களுக்கு முகம்கொடுக்க சகலரும் முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இங்கு கருத்து தெரிவித்த உயர் நீதிமன்ற நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி பிரியந்த ஜயவர்தன, இந்நாட்டின் பொருளாதாரத்தைப பலப்படுத்துவதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, ஜனாதிபதியின் பொருளாதார விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதி சட்டத்தரணிகளான கே.கணகேஸ்வரன், பைசர் முஸ்தபா மற்றும் சந்தக ஜயசுந்தர உள்ளிட்டோர் மேற்படி
முக்கிய அமர்வுகளில் கலந்துகொண்டனர்.
சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்தினம் ,உயர் நீதிமன்ற நீதியரசர்கள் மற்றும் இந்நாட்டு சட்டத்துறையின் முக்கியஸ்தர்களும் வியாபார நிறுவனங்களின் உயர் முகாமைத்துவ குழுவினர் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.