தலிபான்களால் ஆப்கானிஸ்தான் மகளிர் கரப்பந்து அணியின் வீராங்கனையொருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த அணியின் பயிற்றுவிப்பாளர் பாரசீக ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது இதனைத் தெரிவித்துள்ளார்.
அந்த நேர்காணலில் அவர் கூறியதாவது,
மஹ்ஜபின் ஹகிமி என்ற பெண் வீராங்கனை தலீபான்களால் கொல்லப்பட்டார். அத்துடன், அவரின் குடும்பத்தினரும் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கு முன்பு அணியிலிருந்து இரண்டு வீராங்கனைகளுக்கு மட்டுமே நாட்டிலிருந்து தப்பிக்க முடிந்தது.
ஆப்கானிஸ்தானை அவர்கள் கைப்பற்றியதையடுத்து, பெண் வீராங்கனைகளை கொலை செய்ய ஆரம்பித்தனர். அதிலும் சர்வதேச மற்றும் உள்நாட்டு போட்டிகளில் பங்கேற்று பிரசித்தி பெற்றிருந்த ஆப்கானிஸ்தான் மகளிர் கரப்பந்தாட்ட அணியைத் தேடுவதில் அவர்கள் மிகவும் ஆர்வம் காட்டினர்.
இதனால் குறித்த அணியில் இருந்த வீராங்கனைகள் தலிபான்களிடமிருந்து தப்பியோடி மறைந்து வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தலிபான்களால் கொலை செய்யப்பட்டதாகக் கருதப்படும் காபூல் நகராட்சி கரப்பந்து கழகத்தில் விளையாடிய மஹ்ஜபின், அந்தக் கழகத்தின் நட்சத்திர வீரர்களில் ஒருவராகவும் திகழ்ந்துள்ளார்.
அதன் பின்னர், சில நாட்களுக்கு முன்பு, அவரது துண்டிக்கப்பட்ட தலை மற்றும் ரத்தம் தோய்ந்த படங்கள் என்பன சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இதேவேளை, கடந்த வாரம், ஃபிபா மற்றும் கட்டார் அரசாங்கம் ஆப்கானிஸ்தானின் தேசிய மகளிர் கால்பந்து அணி உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உட்பட 100 பேரை அங்கிருந்து வெளியேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.