டொலரின் பெறுமதி வீழ்ச்சி தொடர்பில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் திருத்தப்படுமா என்பது தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
டொலர் பிரச்சினை மற்றும் வெளிநாட்டு நாணய கையிருப்பை பாதுகாக்கும் வகையில் பல சந்தர்ப்பங்களில் பல பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
விவசாயம், மீன்பிடி, கைத்தொழில் போன்றவற்றில் ஈடுபட்டுள்ள பலரின் கோரிக்கைகளை பரிசீலித்து, அதில் பாதிப் பொருட்களின் இறக்குமதித் தடைகள் அவ்வப்போது நீக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
தற்போது பொருளாதாரம் சாதகமான திசையில் நகர்வதால், அதிக தேவை உள்ள பகுதிகள் தொடர்பான இறக்குமதி கட்டுப்பாடுகளை வெளிநாட்டு கையிருப்பு பாதிக்காத வகையில் தளர்த்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.
தெஹியோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
டொலரின் பெறுமதி வீழ்ச்சியுடன் ஒப்பிடும் போது இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் விலைகள் குறிப்பாக நிர்மாணத்துறை தொடர்பான இறக்குமதி பொருட்கள் மற்றும் உபகரணங்களின் விலைகள் குறைந்துள்ளதா என்பதைக் கண்டறிய அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
நிர்மாணத்துறை தொடர்பான பொருட்களின் விலை அதிகரிப்பு பெருமளவிலான மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதித்துள்ளதுடன் பொருளாதார வளர்ச்சியில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.