பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ.) கட்சித்தலைவருமான இம்ரான்கான் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த வழக்குகளின் விசாரணை தீவிரமடைந்து உள்ளது. இந்த நிலையில் இம்ரான்கான், அவரது மனைவி பஸ்ரா பீபி மற்றும் பி.டி.ஐ. கட்சியின் மூத்த தலைவர்கள் உள்பட 80 பேர் வெளிநாடு செல்ல தடை விதித்து பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் அரசை இம்ரான்கான் சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில்,
“வெளியேறுதல் தடை பட்டியலில் எனது பெயரை இணைத்ததற்காக பாகிஸ்தான் அரசுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஏனெனில் வெளிநாடு செல்வதற்கான திட்டம் எதுவும் என்னிடம் இல்லை.
ஏனெனில் வெளிநாடுகளில் எனக்கு சொத்துகளோ, வர்த்தகமோ இல்லை. ஒரு வங்கி கணக்கு கூட இல்லை’ என தெரிவித்தார். மேலும் அவர், ‘எனக்கு ஒரு விடுமுறை கிடைத்தால் நமது வடக்கு பிராந்திய மலைகளுக்குத்தான் செல்வேன்.
இந்த பூமியில் அதுதான் எனக்கு மிகவும் பிடித்தமான இடம்” என்றும் கூறினார்.
நவாஸ் ஷெரீப் உள்பட பாகிஸ்தானை ஆளும் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் முக்கிய தலைவர்களுக்கு வெளிநாடுகளில் சொத்துகள் இருப்பதையே அவர் மறைமுகமாக சாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.