ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் தாமதமானதால், தென்கொரியாவில் வேலை வாய்ப்பை எதிர்பார்த்திருந்த 48 தொழிலாளர்களின் வேலை கனவு தகர்ந்துள்ளதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஸ்ரீலங்கன் விமானம் கொழும்பில் இருந்து கொரியாவுக்கு மே 23 அன்று இரவு 8:00 மணிக்கு புறப்பட இருந்தது.
விமானத்தில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு காரணமாக குறித்த நேரத்திற்கு புறப்பட முடியாமல் மே 24ஆம் திகதி காலை 6 மணியளவில் விமானம் புறப்பட்டதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் ஊடகச் செயலாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கொரியாவில் பணிபுரியும் தொழிலாளர்களின் விவகாரங்களை நிர்வகிக்க முடியாமல் கொரியாவிற்கு செல்ல தயாராக இருந்த தொழிலாளர்களின் வருகையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு கொரிய மனிதவள திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.
எவ்வாறாயினும், இந்த தொழிலாளர்கள் எதிர்வரும் ஜூன் 4 ஆம் திகதி திருப்பி அழைக்கப்படுவார்கள் என கொரிய மனிதவள திணைக்களம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் துணை பொது மேலாளர் பி.ஜி.ஜி.எஸ் யாப்பா தெரிவித்திருந்தார்.