மீலாதுன் நபி தின தேசிய நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று (19) பிற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
தேசிய மீலாதுன் நபி தின விழா 2021 ஐ முன்னிட்டு நினைவு முத்திரையும், முதல் நாள் உறையும் பிரதமர் தலைமையில் இதன்போது வெளியிடப்பட்டது.
வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்கள் குறித்த நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் உறையை பிரதமருக்கு வழங்கினார்.
முஹம்மது நபி நாயகம் அவர்களது பிறந்த தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இதன்போது பிரதமரினால் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.
நீதி அமைச்சர் அலி சப்ரி இதன்போது பிரதமருக்கு நினைவு பரிசொன்றை வழங்கிவைத்தார்.