ஜனாதிபதித் தேர்தலுக்கு முகங்கொடுக்க அரசாங்கமும் தமது கட்சியும் தயாராக இருப்பதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தியுள்ளார்.
அதற்கு அரசாங்கத்தின் அனைத்து தரப்பினரும் தயாராக இருப்பதாக அவர் வலியுறுத்தியுள்ளார். இதன்படி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாட்டுக்காக உழைக்கக் கூடிய பொது வேட்பாளரை முன்வைக்கவுள்ளதாக தெரிவித்த அமைச்சர், அவர் நிச்சயமாக நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக வருவார் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை (19) உடுகம்பலையில் பிரசன்ன ரணதுங்கவின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க,
” .. தற்போது நாடு எதிர்கொண்டிருந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருகிறது. நாட்டின் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. அதற்குக் காரணம் தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான பொருளாதார வேலைத்திட்டமே. எதிர்க்கட்சிகள் இழுத்தடிக்கும் போது இந்த வெற்றியை நாட்டுக்கு வழங்கியுள்ளோம். நாட்டின் பொருளாதார நெருக்கடி தீர்க்கப்படும்போது, மக்கள் தங்கள் விருப்பப்படி ஆட்சியாளர்களை நியமிக்க அனுமதிப்பதுதான் ஜனநாயகம். இந்த ஜனநாயகத்தை நாட்டுக்கு வழங்க கட்சி என்ற ரீதியிலும் அரசாங்கம் என்ற ரீதியிலும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
நாட்டு மக்கள் தேசிய தேர்தலை கோருகின்றனர். அதன்படி ஜனாதிபதித் தேர்தலுக்கு எமது கட்சியும் அரசாங்கமும் தயாராகவே உள்ளன. இந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு, உழைக்கக் கூடிய ஒரு பொது வேட்பாளரை முன்வைக்கிறோம். அவர் இந்த நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக நிச்சயம் வருவார். ஏனென்றால் நம் நாட்டின் முற்போக்கு முகாம் இன்னும் நம்மிடம் உள்ளது.
ஜே.வி.பி.யின் வரலாற்றில் அதிகூடிய தடவைகள் ஜனாதிபதித் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் ஜனாதிபதித் தேர்தல் தவிர்க்கப்பட்டது. அவர்கள் உண்மையில் ஜனாதிபதி தேர்தலுக்கு பயப்படுகிறார்கள். ஜே.வி.பி என்பது நடைமுறை அறிவு கொண்ட அரசியல் கட்சியல்ல, ஏனெனில் அது மக்கள் முன் பொய்யான விசித்திர உலகத்தை உருவாக்கியுள்ளது.
தற்போது உள்ளூராட்சி நிறுவங்களில் உள்ள பிரதிநிதிகளின் காலம் முடிந்து விட்டது. ஆனால், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கிராம மக்களை விட மிக நெருக்கமானவர்கள். பொது சேவை இல்லாமல் இவர்கள் வாழ வழியில்லை. நாட்டில் சட்டங்கள், விதிகள் உள்ளன. அதுதான் உண்மை. ஆனால் அவை பொது மக்கள் சேவைக்கு இடையூறாக இல்லை. எனவே, இந்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களிடம், கிராமத்தில் பொது சேவையை நிறுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். வழக்கம் போல் கிராமத்திற்குச் சென்று உங்கள் சேவையை மீண்டும் கிராமத்தில் தொடருங்கள்..”
கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப் விதான, மிலான் ஜயதிலக்க, கோகிலா ஹர்ஷனி குணவர்தன, உபுல் மகேந்திர ராஜபக்ஷ, முன்னாள் பிரதி அமைச்சர் துலிப் விஜேசேகர , தொகுதி அமைப்பாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.