உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் இலங்கையிடம் கேட்க ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு விஜயம் செய்த ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐரோப்பிய வெளிவிவகாரச் சேவையின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் பாவோலா பம்பலோனி மற்றும் இலங்கையின் வெளிவிவகாரச் செயலர் அருணி விஜேவர்தன ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதுஇது பற்றி விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இங்கு, இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாகவும், எனவே அதன் முடிவுக்காக காத்திருப்பதாகவும் இலங்கை சுட்டிக்காட்டியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்னர் கூட்டாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு நல்லிணக்கம், மனித உரிமைகள், வர்த்தகம், அபிவிருத்தி ஒத்துழைப்பு, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல், துறைசார் ஒத்துழைப்பு, சர்வதேச பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல விஷேட விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் வர்த்தமானி சட்டமூலத்தை மீளாய்வு செய்யும் நோக்கத்திற்காக நீதி அமைச்சு பொதுமக்கள் மற்றும் ஏனைய பங்குதாரர்களிடமிருந்து அவதானிப்புகளை கோரி வருவதாக இலங்கை தெரிவித்துள்ளது.
மேலும் இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக பல ஐரோப்பிய தயாரிப்புகள் இலங்கை சந்தைக்குள் நுழைவது தடுக்கப்பட்டுள்ளதாகவும், ஜூன் 2023க்குள் இறக்குமதி தடைகளை நீக்கும் திட்டத்தை முன்வைக்க இலங்கை செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.