பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு சொந்தமான தோட்டங்களில் புதிதாக 500க்கும் மேற்பட்ட வீடுகள்; நிர்மாணிக்கும் திட்டம் மீள ஆரம்பம் – இலங்கை முதலாளிமார் சம்மேளனம்
பெருந்தோட்ட நிறுவனங்களின் தோட்டங்களில் வீடுகள்; மற்றும் சிறுவர் முன்பள்ளி அபிவிருத்தி நிலையங்களை நிர்மாணிக்க ரூபாய் 01 பில்லியன் அளவில் முதலீடு
ஓவ்வொன்றும் ரூபாய் 2.5 மில்லியன் பெறுமானமுள்ள 500 வீடுகள் கட்டப்பட்டு தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு உரிமையாக்குதல் தோட்டங்களில் வாழ்பவர்களின் நன்மைக்காக 19 சிறுவர் முன்பள்ளி அபிவிருத்தி நிலையங்களை நிர்மாணித்தல் பிராந்திய தோட்ட நிறுவனங்களுக்குச் (RPC) சொந்தமான தோட்டங்களிலுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 500க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் முன்பள்ளி சிறுவர்களுக்காக 19 அபிவிருத்தி நிலையங்களை (ECDs) மீண்டும் நிர்மாணிக்க சுமார் 1 பில்லியன் ரூபா ஒதுக்கப்படுமென இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA) அறிவித்துள்ளது.
பெருந்தோட்ட மனித அபிவிருத்தி அறக்கட்டளையின் (PHDT) படி, பெருந்தோட்ட நிறுவனங்கள், தோட்டத் தொழிற்சங்கங்கள் மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியன உள்ளடங்கிய முத்தரப்பு நீறுவனம் காலி, இரத்தினபுரி, கண்டி, ஹட்டன் மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் 500 தோட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு பயனளிக்கும் இந்த வீடமைப்புத் திட்டம் ஆறு மாதங்களில் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளது.
பெருந்தோட்டங்களில் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 65,000 வீடுகளில் 44,000 வீடுகள் 1992 ஆம் ஆண்டு தேயிலை தோட்டங்கள் தனியார் மயமாக்கப்பட்டதன் பின்னர் கட்டப்பட்டவையாகும்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி ரொஷான் ராஜதுரை, “எமது தோட்டங்களின் வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நாம் உறுதியாய் உள்ளோம். கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக இங்கு கட்டுமானப் பணிகள் மந்த கதியிலேயே நடைபெற்று வருகின்றன, ஆனால் விரைவில் இந்தத் திட்டங்களுக்கான பணிகளை மீண்டும் முழு உத்வேகத்துடன் தொடர எதிர்பார்த்துள்ளோம்” என தெரிவித்தார்.
550 சதுர அடி பரப்பளவை கொண்ட இந்த வீடுகள் ஒவ்வொன்றும் 7 பேர்ச்சஸ் நிலத்தில், இரண்டு படுக்கை அறைகள், வரவேற்பறை சமையலறை மற்றும் கழிவறை ஆகியவற்றைக் உள்ளடிக்கியதுடன் மற்றும் குழாய் நீர் வசதிகளை கொண்டுள்ளது. வீடுகளைச் சுற்றி 3 பேர்ச் பரப்பளவு மேலதிக நிலம் உள்ளதுடன், அதனை வீட்டுத் தோட்ட விவசாயத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதேவேளை, தோட்டத் தொழிலாளர்களின் வேலை நேரத்தில் அவர்களின் பிள்ளைகளை பாதுகாப்பாக பராமரிக்க 19 முன்பள்ளி சிறுவர் அபிவிருத்தி நிலையங்களை நிர்மாணிப்பதற்கு 474 மில்லியன் ரூபா செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தாய்மார்களின் ஐந்து மாதத்திற்கு மேற்பட்ட குழந்தைகள், தகைமையுள்ள சிறுவர் அபிவிருத்தி நிலைய மேம்பாட்டு அதிகாரியால் (CDO) நிர்வகிக்கப்படும் குழந்தைகள் மேம்பாட்டு மத்திய நிலையத்தில் (CDC) பாடசாலையில் சேர்க்கப்படும் வரை பராமரிக்கப்படுவர்.
தோட்டங்களில் உள்ள குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில், சிறுவர் அபிவிருத்தி நிலையங்களை நிர்மாணித்தல் மற்றும் புனரமைத்தல் என்பன துரித கதியில் இடம்பெற்று வருகின்றன.
2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட முன்பள்ளி குழந்தைப் பருவ அபிவிருத்தி நிலையங்கள் நிர்மாணத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளின் முதலீடு மற்றும் கடின உழைப்பினால் 1400 முன்பள்ளி சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் புதிதாகக் கட்டப்பட்டு அல்லது புனரமைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைய பெருந்தோட்டங்களிலில் உள்ள சுமார் 25,000 குழந்தைகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்
‘கடந்த 30 வருடங்களாக, தோட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக பெருந்தோட்ட நிறுவனங்கள் தொடர்ச்சியாக பாடுபட்டுள்ளன. இதனை ஒரு முதலீடாக மட்டும் பார்க்காமல், எங்கள் தோட்டங்களில் வாழும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு சம வாய்ப்புகளை வழங்குவதாகவும் பார்க்கிறோம். இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் பெரும் பங்காற்றிய நன்கொடையாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
பல தலைமுறைகளாக எமது தோட்டத் தொழிலாளர்கள் இலங்கையின் பெருந்தோட்டத் துறையின் அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பை வழங்கி வருகின்றனர். எவ்வாறாயினும், தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது மிகவும் பாதிக்கப்படக்கூடிய இந்த சமூகத்தை பாதுகாக்க அனைத்து பங்குதாரர்களும் இந்நேரத்தில் ஒன்றிணைந்து செயல்படுவது மிகவும் முக்கியமானது.’ என கலாநிதி. ராஜதுரை மேலும் தெரிவித்தார்.