துருக்கி ஜனாதிபதி தாயீப் எர்டோகன் (வயது 69) கடந்த 2003-ம் ஆண்டு முதல் அங்கு ஆட்சி செய்து வருகிறார்.
2003-ல் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட எர்டோகன் 2014-ம் ஆண்டு வரை அந்த பதவியில் இருந்தார். ஆனால் 2014-ல் பிரதமர் பதவி கலைக்கப்பட்டு நாட்டின் உச்சபட்ச அதிகாரமாக ஜனாதிபதி பதவி கொண்டு வரப்பட்டது.
இதனையடுத்து 2014-ம் ஆண்டு எர்டோகன் துருக்கி ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அது முதல் கடந்த 9 ஆண்டுகளாக அவர் அங்கு ஜனாதிபதியாக செயல்பட்டு வருகிறார். 2016-ல் இராணுவம் ஆட்சியை கைப்பற்ற முற்பட்டபோது அதனை முறியடித்து தனது பதவியை எர்டோகன் தக்க வைத்துக் கொண்டார்.
அதன்பிறகு தனது அதிகாரத்தை மேலும் அதிகப்படுத்திக் கொண்டார். இவ்வாறு பிரதமர், ஜனாதிபதி என 20 ஆண்டுகளாக எர்டோகன் துருக்கியில் ஆட்சி செய்து வருகிறார்.
தற்போது வேகமாக அதிகரித்து வரும் பண வீக்கம், நிலநடுக்கத்தின் போது போதுமான மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளாததால் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பு என பொதுமக்கள் அவர் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
மேலும் சர்வாதிகார ஆட்சி நடத்துவதாகவும் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த நிலையில் துருக்கியில் நேற்று ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது.
சர்வாதிகார நாடு என்ற நிலையை மாற்றுவதற்காக அங்குள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எர்டோகனுக்கு எதிராக கெமல் கிலிக்டரோக்லு தலைமையில் போட்டியிட்டனர்.
அதேபோல் எம்.பி.க்களுக்கான தேர்தலும் நேற்று துருக்கியில் நடந்தது. இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான கெமல் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் கடந்த 20 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த எர்டோகனின் சர்வாதிகாரம் முடிவுக்கு வருமா? என்ற எதிர்பார்ப்பில் பலர் உள்ளதாக கூறப்படுகிறது.