போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் நாளை(16) நடைபெறவுள்ள கலந்துரையாடலில் தமது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் கடும் தொழில் நடவடிக்கை எடுக்கப்படும் என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
புகையிரத திணைக்களத்தின் வர்த்தக பிரதிப் பொது முகாமையாளர் பதவிக்கு ஊழல் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தி ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் கடந்த 10ஆம் திகதி 24 மணிநேர அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டது.
விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருடன் கலந்துரையாடி எடுக்கப்படும் தீர்மானங்களின் அடிப்படையில் செயற்குழு கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கும் என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், தமது கோரிக்கைகள் உரிய முறையில் தீர்க்கப்படாவிட்டால், பயணிகளுக்கு குறைந்தபட்ச பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தமது தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
புகையிரத நிலைய அதிபர்களின் ஒன்றியம் அண்மையில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட போதிலும், அது புகையிரதங்களின் ஓட்டத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை என ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.