கம்பளை பிரதேசத்தில் யுவதியொருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
24 வயதுடைய சந்தேகநபர் கம்பளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் படுகொலை செய்யப்பட்ட யுவதியின் சடலம் நேற்று (13) மீட்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட கம்பளை எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய பாத்திமா முனவ்வரா என்பவரின் பிரேதப் பரிசோதனையும் கண்டி தேசிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சிவசுப்ரமணியத்தினால் இன்று (14) நடைபெற்றது.
கழுத்தை நெரித்ததால் தான் மரணம் என்றும், பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்றும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த யுவதி தனது வீட்டிலிருந்து தனது பணியிடத்திற்குச் சென்று கொண்டிருந்த போது, 6 நாட்களாக காணாமல் போயிருந்த நிலையில், அவரது கிராமத்தில் வசிக்கும் 24 வயதுடைய திருமணமான ஒரு பிள்ளையின் தந்தையே யுவதியைக் கொன்று இரகசியமாக புதைத்துள்ளது தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட கம்பளை பொலிஸார், குறித்த பெண் வீதியில் சென்று கொண்டிருந்த போது, அவரிடம் தகாத யோசனை செய்து காட்டுக்குள் இழுத்துச் செல்ல முயற்சித்ததைக் கண்டுபிடித்துள்ளனர்.
யுவத்ஹிக்கு இது பிடிக்காததாலும், இதுபற்றி தந்தையிடம் கூறுவதாக கூறியதாலும் அந்த நபர் பாத்திமாவை கழுத்தை நெரித்து கொன்றதுடன், கீழே விழுந்ததையடுத்து, குடையால் கழுத்தில் குத்தியதும் தெரியவந்துள்ளது.
யுவதியை கொன்று புதைத்ததாக கொலைச் சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
உயிரிழந்த சிறுமியின் சடலத்தின் இறுதிக் கிரியைகள் இன்று (14) இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.