தற்காலிக ஹோட்டல் விடுதியொன்றில் உள்ள ஐந்து மாடிக் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்த பாடசாலை மாணவியின் சடலம் நேற்றுமுன்தினம் (மே 6) இரவு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த மாணவி களுத்துறை நாகொட வைத்தியசாலைக்கு அருகில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவி என அவரது பெற்றோர் அடையாளம் கண்டுள்ளனர்.
ரயில் தண்டவாளத்தின் அருகே இளம்பெண்ணின் நிர்வாண சடலம் விழுந்து கிடப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் விசாரணையை தொடங்கிய பொலிசார், ஐந்து மாடிக் கட்டிடத்தின் பின்புறம் உள்ள ரயில் தண்டவாளத்தின் அருகே முகம் குப்புறக் கிடந்ததைக் கண்டனர்.
களுத்துறை நகரில் புகையிரத பாதையை அண்டிய தற்காலிக ஹோட்டல் விடுதியின் மூன்றாவது மாடியில் இரண்டு அறைகளை வாடகைக்கு எடுத்து அன்றைய தினம் பிற்பகல் மற்றுமொரு இளம் தம்பதிகள் மற்றும் ஒரு இளைஞனுடன் உயிரிழந்த மாணவி தங்கியுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவியுடன் வந்த மற்ற தம்பதிகள், அவரது சடலம் கண்டெடுக்கப்படுவதற்கு சுமார் 30 நிமிடங்களுக்கு முன்னர் விடுதியை விட்டு வெளியேறியுள்ளனர், மேலும் அவருடன் வந்த இளைஞன் அறையை விட்டு வெளியேறியதாகவும், அவரைத் தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை குற்றப்பிரிவு குற்றத்தடுப்பு ஆய்வுகூட அதிகாரிகளினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், நீதவான் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளார்.
மாணவியின் தலை, கழுத்து, தொடைகள் மற்றும் கைகளில் கீறல்கள், வெட்டுக்காயங்கள் மற்றும் காயங்கள் காணப்படுவதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இவர்களுடன் விடுதிக்குள் பிரவேசித்த மற்றைய தம்பதியினர் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடன் சென்ற இளைஞனைக் கண்டுபிடித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு இருக்க குறித்த நால்வரும் சோடிகளாக இரு அறைகளை தங்களது அடையாள அட்டையினை பயன்படுத்தி வாடகைக்கு எடுத்துள்ளனர். பின்னர் அவர்கள் மதுபானம் அருந்தியதாகவும் ஹோட்டலின் சேவகர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
பின்னர் ஒரு சோடி ஹோட்டலை விட்டும் வெளியேற, அடுத்த சோடியில் இளைஞன் மட்டும் அவசர அவசரமாக பதற்றத்துடன் வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னரே குறித்த சடலம் ஹோட்டலுக்கு பின்புறமாக ரயில் பாதை அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஹோட்டலில் தங்குவதற்கு குறித்த மாணவியின் வயது தடையாக இருப்பதால் அவர் பிறிதொருவரின் அடையாள அட்டையை பயன்படுத்தியுள்ளார் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
இது ஒரு கொலையா? அல்லது தற்கொலையா? என விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கபில பிரேமதாசவின் பணிப்புரைக்கு அமைய தலைமையக பொலிஸ் பரிசோதகர்கள் விஜேசிங்க மற்றும் குற்றப் பிரிவு நிலைய கட்டளைத் தளபதி பொலிஸ் பரிசோதகர் தம்மக சில்வா ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.