லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நேற்று லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக விராட் கோஹ்லி, கௌதம் கம்பீர் மற்றும் நவீன்-உல்-ஹக் ஆகியோர் மீது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (BCCI) கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, ரோயல் செலஞ்சர்ஸ் வீரர் கோஹ்லி, லக்னோவ் அணியின் ஆலோசகர் கம்பீர் ஆகியோருக்கு போட்டிக்கட்டணத்தில் 100% அபராதமும், லக்னோவ் அணியின் நவீன்-உல்-ஹக்கிற்கு போட்டி கட்டணத்தில் 50% வீத அபராதமும் விதிக்கப்பட்டது.
கம்பீர், கோஹ்லி மற்றும் நவீன் ஆகியோர் தத்தம் குற்றங்களை ஒப்புக் கொண்டு அபராதங்களை ஏற்றுக்கொண்டதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.
நேற்றைய போட்டியில் லக்னோவ் சுப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 18 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.
இதன்படி, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்களை இழந்து 126 ஓட்டங்களைப் பெற்றது.
தொடர்ந்து 127 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய லக்னோவ் சுப்பர் ஜெயன்ட்ஸ் அணி 19.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்களையும் இழந்து 108 ஓட்டங்களைப் பெற்று தோல்வியை தழுவியது.
போட்டியை தொடர்ந்து ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் விராட் கோஹ்லிக்கும் லக்னோவ் சுப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல்-ஹக்குக்கும் இடையேயான உரையாடலில் அமைதியின்மை ஏற்பட்டது.
முன்னதாக 17 ஆவது ஓவரில் நவீன் உல்-ஹக் துடுப்பாடிக் கொண்டிருந்தபோது களத்தில் இருவருக்கு வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் ஆட்டத்தின் பின்னரான கைகுலுக்களின்போது இந்த முறுகல் மீண்டும் துளிர்விட்டது.
இதனையடுத்து பெங்களூர் அணியின் விராட் கோஹ்லியும் லக்னோவ் அணியின் நவீன் உல்-ஹக்கும் அவர்களது அணியினரால் விலக்கப்பட்டனர்.
இதனையடுத்து விராட் கோலி, லக்னவ் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீருடன் உரையாடியிருந்தார்.
எனினும் கௌதம் கம்பீர், விராட் கோஹ்லியுடனான உரையாடலிலும் அமைதியடையவில்லை.
இந்தநிலையில், ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியமை தொடர்பில் சம்பந்தப்பட்ட மூவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.