வரிவிதிப்பு வரம்பை விரிவுபடுத்தும் நோக்கில் 2017 ஆம் ஆண்டு 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் பல விசேட திருத்தங்கள் நாளை (28) பாராளுமன்றத்தில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
வரி செலுத்தும் செயல்முறைக்கு இலத்திரனியல் முறைகளை அறிமுகப்படுத்துதல், தடுத்து வைத்தல் வரி விலக்கை விரைவுபடுத்துதல் உள்ளிட்ட பல திருத்தங்கள் இதில் உள்ளடங்குவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“தனிப்பட்ட வருமான வரி செலுத்துவோருக்கு மின்னணு வழிமுறைகள் மூலம் வரிக் கணக்கு தாக்கல் செய்வதை கட்டாயமாக்கும் சட்டத்தை இது அறிமுகப்படுத்த உள்ளது. எதிர்காலத்தில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆன்லைன் முறையை அணுகுவதற்கு இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஒரு இலட்சம் ரூபாவிற்கும் குறைவான வட்டி வருமானம் கொண்டவர்கள் தடுத்து வைத்த வரிக்கு உட்படாதவர்களினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணத்தை உடனடியாக விடுவிக்க முடியாததால் பெரும் சிக்கல் எழுந்தது. புதிய திருத்தங்களின்படி, பிடித்தம் செய்யும் வரிக்கு உட்படாதவர்கள் மிகக் குறுகிய காலத்தில் தொகையைச் செலுத்த முடியும்.
புதிய திருத்தம் பண பரிவர்த்தனைகளை மேலும் ஊக்கப்படுத்துவதற்கான வசதிகளை வழங்குகிறது. மின்னணு பரிவர்த்தனைகள் மூலம் உண்மையான வரி வருமானத்தை கணக்கிட விரும்புகிறோம். ஒருவர் தினசரி 5 இலட்சம் ரூபாய்க்கு மேல் கொள்வனவு செய்தால், அவர்களது செலவினங்களில் இருந்து 5 இலட்சத்திற்கும் அதிகமான தொகையைக் கழிக்க உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அனுமதிக்காது. எனவே, அவர்கள் மின்னணு கட்டண முறையை பின்பற்ற வேண்டும்.
நிதி கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறும் அரச நிறுவனங்களின் பரிவர்த்தனைகள் தொடர்பில் உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு அறிவிக்க வேண்டிய கட்டாயம் இது வரையில் இல்லை. ஆனால் இந்த புதிய திருத்தத்தின் மூலம் வங்கிகள், மோட்டார் போக்குவரத்து திணைக்களம் போன்ற நிதி கொடுக்கல் வாங்கல்கள் அடிக்கடி மேற்கொள்ளப்படும் நிறுவனங்களின் செயற்பாடுகள் குறித்து உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு கட்டாயமாக அறிவிக்க வேண்டும்…” எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.