சப்ளையர்களுக்கு பணம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களிலும் பாடசாலை மாணவர்களுக்கான உணவு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இன்று (26) பாராளுமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
இந்த ஆண்டு பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கான உணவு வழங்குனர்களுக்கு உலக வங்கி நிதி 87 கோடி ரூபாயை செலுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நிலையியற் கட்டளைகள் 27(2)இன் கீழ் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கலாநிதி சுசில் பிரேமஜயந்த மேலும் குறிப்பிட்டார்.
“.. சில மாகாணங்களில் பாடசாலை உணவு தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. குறிப்பாக தென் மாகாணத்தில் பெப்ரவரி மாதம் முதல் உணவு வழங்குனர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.
போசாக்கு திட்டத்திற்காக மாகாண சபைகளுக்கு பதினாறாயிரம் மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டது. பெப்ரவரியில் 61 மில்லியன் செலுத்தப்பட்டுள்ளது. 2021 அனைத்து நிலுவைத் தொகையையும் நிறைவு செய்துவிட்டது.
ஒன்பது மாகாணங்களுக்கும் பெப்ரவரி மார்ச் மாதம் 875 மில்லியன் ரூபா பணத் தேவை. எதிர்காலத்தில் உலக வங்கி நிதியில் இருந்து தொகை வழங்கப்படும். எனவே, உணவு வழங்கும் திட்டம் நிறுத்தப்படாது. அது நீண்டு கொண்டே செல்கிறது…”