ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை மீண்டும் இணைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 14 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 8 பேர் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர் பதவிகளை வகிப்பதுடன், அவர்களை மீண்டும் கட்சிக்கு அழைத்து வருவதற்கான கலந்துரையாடல் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. .
அரசாங்கத்தின் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவிகளை வகிக்கும் நிமல் சிறிபால டி சில்வா, லசந்த அழகியவண்ண, ஜகத் புஷ்பகுமார, சாமர சம்பத் தசநாயக்க உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டதுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் அதன் செயலாளர் தயாசிறி ஜயசேகர, கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் ஷான் விஜயலால் டி சில்வா, துஷ்மந்த மித்ரபால, அங்கஜன் ராமநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிமல் சிறிபால டி சில்வா மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய உறுப்பினர்கள் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களை மீண்டும் பதவியில் அமர்த்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், அரசாங்கத்தில் பதவிகளை வகித்துக்கொண்டு கட்சியின் கொள்கைக்கு எதிராக செயற்படுவதால், அரசாங்கத்தில் இருக்கும் போது மீண்டும் கட்சியில் இணைந்து கொள்ள முடியாது என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் அவர்களை மீண்டும் கட்சிக்கு அழைத்து வருவதற்கான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளதாக அறிய முடிகின்றது.