இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு நாட்டின் கல்வியை நவீனப்படுத்தாத அவலத்தை ஒரு நாடாக நாம் இன்று அனுபவித்து வருகிறோம் எனவும், இது ஒரு வகையில் கல்வியின் மரணப் பொறியாக மாறியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாட்டின் கல்வியை புதுப்பிப்பிப்பதற்கும் நவீனத்துவ சூழலுக்கு ஏற்றவாறு மேம்படுத்தும் திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி வகுத்துள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், உலகின் மிக நவீன மற்றும் மேம்பட்ட கல்விமுறைகளுடன் இதனை ஒப்பிட்டுப் பார்க்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்நாட்டிலுள்ள 10,000க்கும் அதிகமான பாடசாலைகளை ஸ்மார்ட் பாடசாலைகளாக மாற்றுவதே தமது ஒரே நோக்கமாகும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இதற்காக மேற்கொள்ள முடியுமான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
எமது நாட்டில் பல பாகுபாடுகள் காணப்படுவதாக தெரிவித்த எதிர்க் கட்சித்தலைவர், மதங்கள், இனங்கள், பணக்காரர்கள், ஏழைகள், இயலுமையுள்ளவர்கள், இயலுமையற்றவர்கள் என பல்வேறு வகைகளில் பிரிந்துள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஹொரவப்பொத்தானை வீரச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு ஸ்மார்ட் வகுப்பறைக்கான உபகரணங்களை நன்கொடையாக வழங்கும் பிரபஞ்சம் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டின் உயிர் நாடியாக கருதப்படும் சிறுவர் தலைமுறையை அறிவு, திறமை மற்றும் வசதிகளுடன் பூரணப்படுத்துவது தார்மீக பொறுப்பு என்று நம்பி அதற்கான நிலையான நோக்கை முன்நோக்காக கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் எண்ணக்கருவுக்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் சக்வல(பிரபஞ்சம்) வேலைத்திட்டத்தின் பாடசாலை வகுப்பறைகளுக்கான டிஜிடல் திறை மற்றும் கணினி உபகரனங்களை அன்பளிப்புச் செய்யும் பிரிவின் 29 ஆவது கட்டமாக 924,000.00 ரூபா பெறுமதியான வகுப்பறைகளுக்கான டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணினி உபகரணங்களும் இவ்வாறு ஹொரவப்பொத்தானை வீரச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு இன்று(11) கையளிக்கப்பட்டது.