தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காத காரணத்தினால் இன்று (06) சுகயீன விடுமுறையில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை சமுர்த்தி வங்கி பொதுச் சங்கம் மற்றும் அலுவலக ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சமுர்த்தி ஊழியர்களின் அமைப்பு மற்றும் கொடுப்பனவு பிரச்சினையை அடிப்படையாக கொண்டு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் என்.ஏ.எம்.ஐ.பி. அபேசிங்க குறிப்பிட்டார்.
மேலும் பல சங்கங்களும் தமது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவளிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகஎன்.ஏ.எம்.ஐ.பி. அபேசிங்க மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், நாடு பொருளாதார நெருக்கடியில் இருக்கும் போது இவ்வாறான வேலைநிறுத்தங்களை நடைமுறைப்படுத்துவது நியாயமானது அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கொடுப்பனவு பிரச்சினையின் அடிப்படையில் நீர் வழங்கல் தொழிற்சங்கங்களின் கூட்டுக் கூட்டமைப்பினால் ஆரம்பிக்கப்பட்ட தொழில் நடவடிக்கை மேலும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
தமது பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் தீர்வை வழங்கும் வரை தொழில்சார் நடவடிக்கை தொடரும் என சங்கத்தின் இணை அழைப்பாளர் பொறியியலாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்தார்.