வைத்தியசாலைகளுக்குத் தேவையான புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை இயந்திரங்களை கொள்வனவு செய்யும் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(04) பாராளுமன்றத்தில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பான விடயங்களை தாம் பல தடவைகள் பாராளுமன்றத்தில் முன்வைத்திருந்தாலும், செப்டம்பர் 20,2022 அன்று, நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் இவ்விவகாரம் முன்வைக்கப்பட்ட போது, சேவை வழங்குனருடன் ஒப்பந்தம் செய்து அதை புதுப்பித்தல் தொடர்பான பணிகள் நடைபெற்று வருவதாக சுகாதார அமைச்சர் இதற்குப பதில் வழங்கும் முகமாக தெரிவித்திருந்தார்.
இதன் பிரகாரம்,2013 ஆம் ஆண்டு எலெக்டா நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் திருத்தம் செய்வதற்கு விநியோக சேவை வழங்கும் நிறுவனமும்,சுகாதார அமைச்சும் மற்றும் புற்றுநோயியல் நிபுணர்கள் சங்கமும் இணக்கம் தெரிவித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
திருத்தங்களுக்கு புற்றுநோயியல் நிபுணர்களைக் கொண்ட தொழில்நுட்பக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான தொழில்நுட்பக் குழுவின் அங்கீகாரத்தை தெரிவித்து அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தையையும் எதிர்க்கட்சித் தலைவர் சபைக்கு சமர்ப்பித்தார்.
இதன் பிரகாரம்,இந்த ஒப்பந்தத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவையின் ஒப்புதல் தேவை எனவும்,இந்த அனுமதியைப் பெறுவதற்குத் தேவையான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை தாம் அறிய விரும்புவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அது அவ்வாறு இருந்தும்,இந்த ஒப்பந்தத்தில் திருத்தம் செய்யாமல் பழைய ஒப்பந்தத்தின் பிரகாரம் இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சின் செயலாளர் தயாராக உள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்தக் கதிரியக்க சிகிச்சை இயந்திரங்கள் உடனடியாக புதுப்பிக்கப்படாததால்,பல புற்றுநோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.