தற்போதைய அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டமூலத்தை அவசர அவசரமாக கொண்டு வர முயற்சிக்கிறதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டுப் பிரதானி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;
“.. பயங்கரவாத தடைச்சட்டம் நாட்டில் பயங்கரவாதத்திற்கு எதிராக கொண்டு வரப்படுகிறதா அல்லது நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் கொண்டுவரப்படுகிறதா அல்லது அரசாங்கத்தின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கங்களுடன் கொண்டுவரப்பட்டதா என்ற கேள்வி எமக்கு உள்ளது.
இந்த சட்டத்தின் போர்வையில் அனைத்து தொழிற்சங்கங்களையும் நசுக்குவதற்கும், அனைத்து மக்கள் போராட்டங்களையும் நசுக்குவதற்கும்,அனைத்து தொழில் சார் மக்களின் உரிமைகளையும் நசுக்குவதற்குமே இதனூடாக செயற்படுவதைக் காணமுடிகிறது. அதன் ஷரத்துக்கள் இதையே புலப்படுத்துகின்றன. இந்த அனைத்து தொழிற்சங்க உரிமைகளும், போராட்டங்களுக்கும் பயங்கரவாதச் சட்டத்தைப் பயன்படுத்தி நசுக்குவதற்கு இடமளிக்கும் விதமாக தயாராகி வருவதாகவே புலப்படுகிறது.
எனவே தொழில் சார் உரிமைகளுக்கும், தொழிற்சங்கப் போராட்டங்களுக்கும் எதிராக அரசாங்கம் செயற்படுவதைக் காணமுடிகிறது. சகல தொழிற்சங்கப் போராட்டமும் நியாயமானது என்று நாம் கூறவில்லை. நியாயமற்ற தொழிற்சங்க தலையீடுகளை நாம் அதிகம் பார்த்துள்ளோம். எவ்வாறாயினும், அரசாங்கம் தற்போதுள்ள சட்ட கட்டமைப்பிற்கு வெளியே சென்று தொழிற்சங்கப் போராட்டங்களை நசுக்க பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைப் பயன்படுத்தினால், அதன் மூலம் மனித உரிமைகள் உட்பட மக்களின் சகல உரிமைகளையும் நசுக்கி நாட்டின் ஜனநாயகத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சித்து வருகின்றது என்பதுவே இதன் மூலம் தெளிவாகின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதானமாக செயல்பட்டவர்கள் யார் என்பது குறித்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது எங்களுக்குத் தெரியும். இது குறித்து தொடர்ந்து பேசினோம். இந்த சம்பவத்தில் மிக முக்கிய பங்கு வகித்த சாரா ஜெஸ்மின் என்ற பெண்ணின் சடலம் எங்கும் கிடைக்கவில்லை. சாய்ந்தமருது தாக்குதலில் அடையாளம் தெரியாத சடலம் எதுவும் காணப்படவில்லை. உடல்கள் அழிந்து போகும் விதமாக வெடிகுண்டுகள் அங்கு வெடிக்கவுமில்லை. இறந்த உடல்கள் அனைத்தையும் அடையாளம் காண முடிந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், தற்போது சாரா ஜெஸ்மினின் மூன்றாவது டி என் ஏ பரிசோதனையில் இறந்ததாக தெரிய வந்துள்ளதாம். இறந்தவர்களில் அவ்வாறு அடையாளம் தெரியாதவர்களின் ஒரு சடலம் கூட இருக்கவில்லை. அப்படியானால், இந்த ஈஸ்டர் தாக்குதலை மூடிமறைப்பதற்கு யாருக்கு தேவையுள்ளது என்ற கடுமையான கேள்வி எழுந்துள்ளது. இவ்விடயத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இதில் ஈடுபடுபவர்களை மூடிமறைக்கும் பணியை செய்யாமல், பிரதான சூத்திரதாரியாக செயல்பட்டவர்கள் யார் என்பதை கண்டறியும் பணியை மேற்கொள்ளுமாறு கோருகிறோம்.
ஈஸ்டர் தாக்குதலை யார் விரும்பினார்கள், யார் திட்டமிட்டார்கள், யார் ஆட்சியைக் கைப்பற்றினார்கள்,யாரை ஆட்சிக்குக் கொண்டு வர முயற்சித்தார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.
அப்போது தற்போதைய ஜனாதிபதி பிரதமராக இருந்ததையும், பாதுகாப்பு தொடர்பில் அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதையும் நாம் அறிவோம், ஆனால் தற்போது ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரியாக இருந்தவர்களை அடையாளம் காணும் கடமை ஜனாதிபதிக்கு உள்ளது. அதற்கான அதிகாரம் இன்று அவரிடம் உள்ளது. எனவே இவற்றை மூடிமறைப்பதற்கு இடமளிக்காமல், ஈஸ்டர் தாக்குதலுக்கு பிரதான சூத்திரதாரியாக செயல்பட்டவர்களை கண்டுபிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதுதான் இறந்தவர்கள் மற்றும் அதனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது. ஈஸ்டர் தாக்குதல் கதையும் மறைந்து போகும் வாய்ப்புள்ளது. மூன்றாவது டி என் ஏ பரிசோதனையில் சாரா ஜெஸ்மின் இறந்து விட்டதாக கூறினால் அது எவ்வாறு நடக்கும், அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை.
எனவே அரசாங்கம் இவற்றை மூடிமறைக்க முயலாமல் நாட்டு மக்களுக்கு நீதியை உறுதிப்படுத்தும் வகையில் விசாரணைகளை தெளிவுபடுத்துமாறு கோருகிறோம்…”