நாட்டின் வருடாந்த காய்ந்த மிளகாயின் தேவை 52,500 மெற்றிக் தொன் என்றாலும், அதில் 48,000 மெற்றிக் தொன் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும், இறக்குமதி செய்யப்படும் மிளகாயில் அஃப்லாடோக்சின் உள்ளிட்ட பல்வேறு இரசாயனங்கள் காணப்படுவதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இந்த நாட்டில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள் கூட அந்நாடுகளில் மிளகாய் தோட்டங்களில் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.
நாட்டிலுள்ள காய்ந்த மிளகாயின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தேவையான அளவு மிளகாய் பயிரிடும் வேலைத்திட்டம் இவ்வருடம் துரிதப்படுத்தப்படும் என விவசாய அமைச்சர் தெரிவித்தார்.
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் அரை ஏக்கர் மிளகாய்ச் செய்கையின் மூலம் இலட்சக்கணக்கான ரூபா வருமானம் பெறுவதுடன் அதிக மகசூலையும் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த நாட்களில் இலங்கை சந்தையில் விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்பட்ட சில மிளகாய்களில் அதிக காரமான தன்மை காணப்படுவதாக பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டஸ்ட்ரியல் டெக்னாலஜியின் தலைவர் பேராசிரியர் ஜி.ஏ.எஸ். பிரேமகுமார் தெரிவிக்கையில்;
“காய்ந்த மிளகாயை இறக்குமதி செய்வதற்கு சில தரநிலைகள் உள்ளன. இலங்கை தர நிர்ணய நிறுவகத்தின் தரங்களுக்கு அமைவாக அவை பரிசோதிக்கப்படுகின்றன.
காய்ந்த மிளகாயில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அது தொடர்பான மாதிரிகள் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் எமது நிறுவனத்திற்கு வழங்கப்பட வேண்டும். ஏனென்றால், சந்தைக்குச் சென்று காய்ந்த மிளகாய் மாதிரிகளைப் பெறுவதற்கு எங்கள் நிறுவனத்திற்கு அதிகாரம் இல்லை.
இலங்கை தர நிர்ணய நிறுவனம் மற்றும் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளது. இன்ஸ்டிடியூட் ஆப் இன்டஸ்ட்ரியல் டெக்னாலஜியால் மாதிரிகளை அப்படி சோதிக்க முடியவில்லை.” எனத் தெரிவித்திருந்தார்.