எரிபொருட்களின் விலை குறைவினால் பாடசாலை வேன் கட்டணத்தை குறைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் மல் ஸ்ரீ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், விலையை சதவீதமாக குறைப்பது கடினம் எனவே பேசி விலையை தீர்மானிக்க வேண்டும் என்றார்.
“அதிகரிப்பு விஷயத்தில் நாங்கள் அதிகரித்ததைப் போல, பெற்றோர் மற்றும் உரிமையாளர் மற்றும் ஓட்டுநருடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் விலையைக் குறைக்க அவர்களுடன் இணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறோம். எனவே, அதை அடிப்படையாக செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்..”
இதேவேளை, எரிபொருள் விலை குறைப்பின் அனுகூலத்தை பேரூந்து கட்டணத்தில் மட்டுமன்றி ஏனைய பிரதேசங்களிலும் மக்களுக்கு வழங்க வேண்டும் என இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
எவ்வாறாயினும், எரிபொருள் விலை குறைந்தாலும் புகையிரத கட்டணத்தை குறைக்கும் வாய்ப்பு இல்லை என பதில் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
ஆனால் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று (29) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படவுள்ள நிலையில், பேரூந்து கட்டணங்கள் 12.9 வீதத்தால் குறைக்கப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
நேற்று நள்ளிரவு முதல் 92 ஒக்டேன் பெட்ரோல் லீட்டர் 60 ரூபாவாலும், ஆட்டோ டீசல் லீட்டர் 80 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 95 ஒக்டேன் பெட்ரோல் லீட்டர் 135 ரூபாவினாலும், சுப்பர் டீசல் லீட்டர் 45 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை திருத்தத்துடன், குறைந்தபட்ச பேரூந்து கட்டணத்தை இன்று நள்ளிரவு முதல் 30 ரூபாவாக குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.