தற்போதைய சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸுடைய புதல்வரும் சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவசரும் தான் MBS என அழைக்கப்படும் முஹம்மத் பின் சல்மான் ஆவார்.
கடந்த வருடம் முதல் சவூதி அரேபியாவின் பிரதமராகவும் பணியாற்றி வருகிறார். 2015 முதல் 2022 வரை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சராகவும் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.
1985 ஆகஸ்ட் 31 இல் பிறந்த இவர் சிறு வயதிலிருந்தே அரசியல் விவகாரங்கள் மற்றும் அதனோடு தொடர்புடைய செயற்பாடுகளில் பெரும் ஆர்வம் காட்டி வந்தார். தனது தந்தையின் நிழல் தொடர்ந்து நடந்த இவர் தனது அரசியல் ரீதியான பிம்பத்தினை வளர்த்துக் கொள்வதில் மிகுந்த கவனமெடுத்தார். பல தரப்பட்ட உயர் புள்ளிகளுடன் எவ்வாறு தொடர்பு கொள்வது என்பது பற்றியும் அவர்களூடாக அரசியல் ரீதியான வலுவான உறவுகளை பேணுவது என்பது பற்றிய உத்திகளிலும் கைதேர்ந்தவர். 2007 ஆம் ஆண்டு மன்னர் சவூத் பலகலைக்கழகத்திலே சட்டக்கற்கையிலே இளங்கலைமானிப் பட்டம் பெற்ற இவர் அரேபிய ராஜ்யத்துக்குள் பொருளாதார, அரசியல் மற்றும் சுற்றுலாத் துறைகளின் மேம்பாட்டை கருத்தில் கொண்டு பல தொலைநோக்கு திட்டங்களை செயற்படுத்தி வருகிறார்.
MBS தேசியவாத சிந்தனை கொண்டவர் என பலராலும் வர்ணிக்கப்படுகிறார். அரசியலில் நவீன அணுகுமுறைகள் மற்றும் பொருளாதார, சமூக பிரச்சினைகளில் தாராளவாத நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார். இவரது கருத்தியல்களும், நடைமுறைகளும் முழுமையாக நவீனத்துவம் சார்ந்ததாக இருக்கின்றன.
MBS தனது ஆட்சியை மேலும் வலுப்படுத்தும் நோக்கோடும், இராஜ்யத்துக்கு உள்ளும் சர்வதேச ரீதியாகவும் தனது ஆட்சி தொடர்பான ஒரு நல்லபிப்பிராயத்தை ஏற்படுத்தவும் மேற் சொன்னவாறு பல சீர்திருத்தங்கள், புதிய திட்டங்களை முன் வைத்திருக்கிறார்.
இந்த திட்டங்கள் Saudi Vision 2030 என்ற மகுடம் தாங்கி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
Vision 2030 என்றால் என்ன?
சவூதி விஷன் 2030 எனும் மூலோபாயத் திட்டம் 2030 ஆம் ஆண்டு ஆகும் போது தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பெற்றோலிய உட்பத்தி அல்லாத துறைகளில் முதலீடு செய்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை பல்வகைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
விஷன் 2030 திட்டமானது துடிப்பானதொரு சமூகம், வளமான பொருளாதாரம் மற்றும் லட்சியம் வாய்ந்ததொரு நாடு ஆகிய மூன்று முதன்மைக் கருப்பொருள்களை மையமாக கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது.
இளவரசர் முஹம்மத் பின் சல்மான் தலைமையிலான பொருளாதார மற்றும் மேம்பாட்டு விவகார கவுன்சிலால் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாயந்த விஷன் 2030 திட்டம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இது சவூதி அரேபியாவின் நீண்ட கால பொருளாதார வெற்றிக்கான பல பாரிய இலக்குகள் மற்றும் சீர்திருத்த உத்திகளை உள்ளடக்கியது. இதில் மானியங்கள் குறைப்பு, சவூதி அரம்கோவுக்கான தனியார் முதலீட்டை ஊக்குவித்தல் இத்தோடு குறிப்பாக நாட்டின் சுற்றுலா மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளை பலப்படுத்துதல், மேம்படுத்தல் தொடர்பான திட்டங்கள் அடங்குகின்றன.
ஒரு துடிப்பான சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்காக, சவுதி அரேபியா அதன் மக்கள் மற்றும் இஸ்லாமிய மார்க்க விழுமியங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இது, தொடர்ச்சியான சில முயற்சிகளின் மூலமும் திட்டமிடல்கள் மூலமுமே சாத்தியப்பட முடியம். வருடாந்தம் உம்ரா கிரியைக்காக வரும் யாத்திரிகர்களை 8 மில்லியனிலிருந்து 30 மில்லியன் வரை அதிகரித்தல்; உலகின் மிகப்பெரிய இஸ்லாமிய அருங்காட்சியகத்தை நிறுவுதல்; யுனெஸ்கோவில் பதிவு செய்யப்பட்ட சவுதியின் பாரம்பரிய தளங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குதல்; ராஜ்யத்திற்குள் கலாச்சாரம் மற்றும் பொழுதுபோக்குக்கான வாய்ப்புகளில் வளர்ச்சியை ஊக்குவித்தல்; ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை ஊக்குவித்தல், இதனால் வாரத்திற்கு ஒருமுறை உடற்பயிற்சி செய்யும் குடிமக்களின் எண்ணிக்கை 13 முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்கும்; மற்றும் உலகின் 100 முதல் தரவரிசை நகரங்களில் சவுதியின் முக்கிய மூன்று நகரங்களும் உள்ளடங்கும் வகையில் அந்நகரங்களை அபிவிருத்தி செய்து மேம்படுத்தல்.
இவைகள் அந்த முக்கிய திட்டங்களில் உள்ளடங்குகிறது. இத்தோடு சேர்த்து பெண்களுக்கான தொழில் மற்றும் கல்வி வாய்புகளை அதிகரித்தல், விளையாட்டு கலை போன்ற துறைகளில் ஈடுபடுத்தல் அவர்களுக்கான சம உரிமைகளை வழங்குதல் போன்ற பெண்கள் நலன் கருதிய திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பொருளாதாரத்தில் ஒரு வளமான நிலமையை அடைவதற்காக, சவூதி அதன் பொருளாதாரத்தை பன்முகப்படுத்தி அதன் குடிமக்களுக்கு கனிசமான வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது. இத்தோடு சேர்த்து முக்கியமாக கல்வி, தொழிற்துறை மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வம் காட்டுதல்; அரசுடைமைகளை தனியார் மயப்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை பல்வகைப்படுத்தல்; உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க சக்திகள் மற்றும் சுற்றுலா துறை போன்ற வளர்ச்சியடையாத தொழில்துறைகளை மீள்கட்டமைப்புசெய்தல்; பாலர் பருவம் முதல் உயர்கல்வி வரை அந்நாட்டுக் கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டம் மற்றும் அதன் தரத்தை நவீனப்படுத்துதல்; 2030க்குள் உலகின் முதல் 200 பல்கலைக்கழகங்களில் குறைந்தது சவுதி அரேபியாவின் ஐந்து பல்கலைக்கழகங்களைக் கொண்டிருக்கும் வகையில் மாற்றங்களை கொண்டுவருதல்; நிதி உதவிகளை வழங்குவதன் மூலம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்துதல். 2030-க்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்பை 20% லிருந்து 35% ஆக உயர்த்துதல்; போன்ற திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
ஒரு இலட்சிய நாடாக இருப்பதற்காக, சவூதி அரேபியா தனது அரசாட்சி உத்திகளில், பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனுடனான இயங்கு தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. ‘நிலையான வெற்றியை உறுதியான அடித்தளங்கள் மூலம் மட்டுமே அடைய முடியும்’ இந்த கூற்றை அடிப்படையாக கொண்டு, அனைத்து நிலை ஊழல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது; ஆன்லைன் சேவைகளை விரிவுபடுத்துதல் மற்றும் நிர்வாகத் தரத்தை மேம்படுத்துவதன் மூலம் அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கிறது; 500,000 க்கும் மேற்பட்ட அரசாங்க ஊழியர்களுக்கு சிறந்த முறைகளில் பயிற்சி அளிப்பதற்காக மனித வள மேம்பாட்டுக்கான கிங் சல்மான் திட்டத்தை நிறுவுதல்; மற்றும் அதிகரித்த வினைதிறன் மற்றும் விளைதிறனுடன் செயற்படுவதன் மூலம் இலாப நோக்கற்ற துறைகளை மேம்படுத்துகிறது.
எனவே மொத்தத்தில் இந்த Vision2030 திட்டம், சவூதி அரேபியாவின் பொருளாதார அபிலாஷைகளை அடைவதற்கும் குடிமக்களின் வாழ்க்கை தரத்தை மாற்றியமைப்பதற்கான முயற்சியில் முதல் படியாகும்.
எழுத்து- காலித் ரிஸ்வான்