ஆசிரியர் இடமாற்றச் சபையை கலைத்தல் உள்ளிட்ட பல விடயங்களை முன்வைத்து இன்று (22) கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தப் போராட்டத்தில் பல ஆசிரியர் சங்கங்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், தற்போது வழங்கப்பட்டுள்ள சிபாரிசுகளின் பிரகாரம் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேசிய பாடசாலைகளிலும் பத்தாண்டு மற்றும் வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்கள் ஏப்ரல் 17 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என கல்வி அமைச்சு நேற்று (21) அறிவித்துள்ளது.
விசேட மேன்முறையீடுகளுக்கு உட்பட்ட ஆசிரியர்களின் இடமாற்றங்கள் தவிர்ந்த ஏனைய இடமாற்றங்கள் இவ்வாறு மேற்கொள்ளப்படும் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.
சாதாரண மற்றும் உயர்தர வகுப்புகளில் கற்பிக்கும் ஆசிரியர்களின் இடமாற்றம் காரணமாக பிள்ளைகளுக்கு ஏதேனும் பாதகம் ஏற்படுமாயின் அதிபரினால் சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீடுகள் விசேட மேன்முறையீட்டுக் குழுவினால் மீள்பரிசீலனை செய்யப்படும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுவரை வழங்கப்பட்ட அனைத்து தற்காலிக பணிகளும் ஜூன் 30ம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.