பாகிஸ்தான் எதிர்பார்க்கும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி மேலும் தாமதமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சில தொழில்நுட்ப காரணங்களால் பாகிஸ்தான் கோரிய கடன் வசதி தாமதமாகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டத்தில் ஒருமித்த கருத்தை எட்டுவதில் தற்போதுள்ள சிக்கல்கள் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தின் ஒப்புதலையும் பாதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வரும் பாகிஸ்தான் தற்போது பொருளாதார வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சூழ்நிலைகளில் இருந்து விடுபட சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 1.1 பில்லியன் அமெரிக்க டாலர்களை விரைவான கடன் தவணையாக பாகிஸ்தான் எதிர்பார்க்கிறது என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த நவம்பரில் பெறப்பட இருந்த நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமின்மை காரணமாக அது தடைப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பாகிஸ்தான் கோரும் மொத்த கடன் நிவாரணம் 6.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.