ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டை இரத்து செய்யுமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த ரிட் மனுவை ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று (14) விசாரணை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றில் மிகவும் சிரேஷ்ட நீதிபதிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஷங்க பந்துல கருணாரத்ன அறிவித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தனிப்பட்ட முறைப்பாட்டினை அழைப்பாணையின்றி மைத்திரிபால சிறிசேன சமர்பித்து இறுதித் தீர்மானம் அறிவிக்கும் வரையில் விசாரணைகளை ஒத்திவைக்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் கோட்டை நீதவானுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ.மரிக்கார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு அன்று பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடமை தவறிய குற்றச்சாட்டின் பேரில், தந்தை சிறில் காமினி மற்றும் இருவர், கோட்டை நீதவான் நீதிமன்றில் தனிப்பட்ட முறைப்பாடு செய்திருந்தனர்.