கட்சி என்ற வகையில் விமர்சனங்களை ஏற்க எப்போதும் தயாராக இருக்கிறோம், ஆனால் சேறு பூசுவதை எதிர்க்கிறோம். எதிர்க்கட்சியினர் நிரூபிக்க முடியாத விஷயங்களை அறிவித்து மக்களை தவறாக வழிநடத்த முயல்கின்றனர். கிராம மக்கள் எப்போதும் எங்களுடன் உறுதியாக இருக்கிறார்கள். அவர்கள் எம்மை விட்டு விலகமாட்டார்கள் என்ற நம்பிக்கை எமக்குள்ளதாக முன்னாள் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொனராகலை மாவட்ட மாநாட்டில் நேற்று (12) மொனராகலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், “எங்கள் ஆட்சிக் காலத்தில் நாடு முழுவதும் வளர்ச்சி அடைந்தது. முக்கிய வீதிகளை மட்டுமின்றி, கிராமப்புற சாலைகளும் கார்பெட் போடப்பட்டது. அன்று, எதிரணியினர் கம்பளத்தை சாப்பிடலாமா என்று கேட்டார்கள். ஆனால் இன்று கிராமப்புற மக்கள் தங்கள் பொருட்களை கொண்டு வரவும் மற்ற வசதிகளை சந்திக்கவும் அந்த வீதிகளை பயன்படுத்துகின்றனர்.
சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் மொனராகலை மாவட்ட கிராமங்களுக்கு மின்சாரம் இல்லை. ஆனால் எமது அரசாங்கத்தின் கீழ் 96% வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. கிராமப்புற பாடசாலைகளுக்கு தேவையான பௌதீக வசதிகளும் மனித வளங்களும் வழங்கப்பட்டுள்ளன.
மொனராகலைக்கு முதல் தடவையாக நீச்சல் தடாகம் வழங்கப்பட்டது. இன்று மஹாநாம பிள்ளைகள் மட்டுமன்றி அதனை சுற்றியுள்ள பாடசாலைகளின் பிள்ளைகளும் நீச்சல் போட்டிகளில் பங்குபற்றுகின்றனர்.
கிராமப்புறங்களில் விவசாய நடவடிக்கைகளில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நுகர்வோர் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. எதிர்காலத்தில் விவசாய நடவடிக்கைகளுக்கு உறுதுணையாகி விவசாயிகளின் பொருளாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் தேர்தலுக்கு அஞ்சமாட்டோம். எங்கள் கட்சி கிராமத்துக்காக உழைத்த கட்சி. கிராமப்புற மக்களின் அன்பை பெற்ற கட்சி. எனவே தேர்தலுக்கு அஞ்சப்போவதில்லை வெல்லஸ்ஸ மக்களே பத்து பிராந்திய சபைகளின் அதிகாரத்தை எமக்கு வழங்கியது.
அடுத்த தேர்தலிலும் அதுவே வழங்கப்படும் என்பதில் ஐயமில்லை.. கிராமம் கிராமமாக சென்று மக்கள் விடுதலை முன்னணி நாட்டை கட்டியெழுப்பும் என்கிறார்கள். ஆனால் 1971, 88, 89 ஆகிய ஆண்டுகளில் நாட்டின் வளங்களை அழித்தது மக்கள் விடுதலை முன்னணிதான்.அத்தகைய ஒரு கட்சிக்கு அதிகாரம் கொடுக்க வெல்லஸ்ஸ மக்கள் முட்டாள்கள் அல்ல.
அரசு ஊழியர்கள் தங்கள் தொழில் உரிமைகளுக்காக வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர், அவ்வாறு மக்களை சிரமப்படுத்த வேண்டாம். பாடசாலை ஆசிரியர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் வேலைநிறுத்ததால் பாடசாலை மாணவர்களின் பரீட்சைகள் தாமதமாகிறது, வைத்தியர்கள் மற்றும் பிற சுகாதார ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர், இதனால் நோயாளிகள் ஆதரவற்றுள்ளனர். முடிந்தவரை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளலாம்..”