அரசின் வரித் திருத்தத்திற்கு எதிராக வங்கி ஊழியர்களும் இன்று கறுப்பு அணிந்து பணிக்கு சமூகமளிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் சிரேஷ்ட ஆலோசகர் அனுப நந்துல தெரிவித்துள்ளார்.
எனினும், வேலைநிறுத்தப் போராட்டத்தால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வங்கித் துறைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை கருத்தில் கொண்டு, இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பது குறித்த தனது நிலைப்பாட்டை இன்று அறிவிக்க உள்ளதாக பிரகதி வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
நாளைய தினம் வேலைநிறுத்தப் போராட்டத்துடன் இணைந்து இன்று முதல் தொழில் நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த கூட்டமைப்பினரின் இணை அழைப்பாளர் உபாலி ரத்நாயக்க நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அத்துடன், நாளை முதல் எழுத்துப்பூர்வமாக செயற்படுவதற்கான தொழில் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் உப தலைவர் தனுஷ்க பராக்கிரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தினால் கடந்த 9ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கல்வி நடவடிக்கைகளில் இருந்து விலகும் தொழிற்சங்க நடவடிக்கை இன்றும் தொடர்கிறது.
அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிராக தொழிற்சங்கம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், நாளை நள்ளிரவு முதல் நாளை மறுதினம் நள்ளிரவு வரை அடையாள ரீதியில் 24 மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.