ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான கலந்துரையாடலின் போது தாம் முதலில் விருப்பத்தை வெளிப்படுத்திய போதிலும், அரசாங்கத்தில் இணையும் எண்ணம் தமக்கு இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் தமக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் வினவியபோது, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“..முன்னதாக, அரசாங்கம் தேசிய அரசாங்கத்தை அமைக்கத் திட்டமிட்டபோது, கோரிக்கைகள் இருந்தன. அவர்கள் (அரசு) நாட்டின் நலனுக்காக நான் ஒரு சவாலை ஏற்கத் தயாரா என்று கேட்டதற்கு, நான் ஆம் என்று சொன்னேன். ஆனால் தற்சமயம் அதுபோன்ற திட்டங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை என்று நினைக்கிறேன்..”
அரசாங்கத்தில் இணைவீர்களா என்ற கேள்விக்கு, “எனக்கும் அவ்வாறான திட்டங்கள் எதுவும் இல்லை” என்றார்.
தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை ஏற்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், சுகாதார அமைச்சுப் பதவி வழங்கினால் ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்தார்.