அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இது ஒரு தோல் புற்றுநோய் அறுவை சிகிச்சை என்றும் பெப்ரவரி 16 அன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்றும் வெள்ளை மாளிகை மருத்துவர் கெவின் ஓ’கானர் தெரிவித்துள்ளார்.
பைடனின் மார்புப் பகுதியில் இந்தப் புற்றுநோய்ப் பகுதி காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஜனாதிபதி பைடனுக்கு வாஷிங்டனில் உள்ள வால்டர் ரீட் இராணுவ மருத்துவ மையத்தில் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
தற்போது அவர் முழுமையாக குணமடைந்துவிட்டதாகவும், மேற்கொண்டு சிகிச்சை தேவையில்லை என்றும் டாக்டர் ஓ’கானர் கூறியிருந்தார்.
இந்த வகை தோல் புற்றுநோயை basal cell carcinoma என்று அழைக்கப்படுகிறது.
இது அமெரிக்காவில் மிகவும் பொதுவான வகை புற்றுநோயாகும். இவ்வகை புற்று நோயானது உடலின் மற்ற இடங்களுக்கும், உறுப்புகளுக்கும் அதிகம் பரவாது எனவே இலகுவாக குணப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 80 வயதாகும் ஜோ பைடன், இதுபோன்ற புற்றுநோய் அறுவை சிகிச்சையை எதிர்கொள்வது இது முதல் முறையல்ல. அவர் ஜனாதிபதியாக பதவியேற்கும் முன்பே தோல் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த ஜனவரி மாதம் பைடனின் மனைவி ஜில் பைடனுக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இது அவரது கண்களுக்கு மேல் மற்றும் மார்புப் பகுதியில் உள்ள தோல் புற்றுநோயின் சில பகுதிகளை அகற்றுவதாகும்.
பின்னர் வலது கண்ணுக்கு மேல் அகற்றப்பட்ட பகுதிகளில் புற்றுநோய் செல்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஜில் பைடனுக்கு தற்போது 71 வயதாகிறது.