சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டை இறுதி செய்ய உதவுவதற்காக, இலங்கை மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது.
கொள்கை வட்டி வீதங்களை உயர்த்துவதற்கு இலங்கை மத்திய வங்கி மேற்கொண்ட தீர்மானத்தை சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் குறித்த தீர்மானம் பொருத்தமான நடவடிக்கை எனவும், பணவீக்க இலக்குகளின் கீழ் அமைக்கப்பட்ட தமது நோக்கங்களுக்கு ஏற்ற வகையில் இது அமைந்துள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.
மத்திய வங்கி அதன் நிலையான வைப்பு வசதி விகிதம் மற்றும் நிலையான கடன் வசதி விகிதம் என்பனவற்றை முறையே 15.50 மற்றும் 16.50 வீதமாக உயர்த்தியுள்ளது.
இந்த நடவடிக்கையானது, பணவீக்கத்தை விரைவாகக் குறைக்கும் மத்திய வங்கியின் அர்ப்பணிப்பை வௌிப்படுத்துவதாகவும் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
உறுதியான பணவீக்க வீழ்ச்சியானது சந்தையின் நம்பிக்கையை அதிகரிக்க உதவிபுரியும் என்பதுடன், பாரிய வணிக நிறுவனங்களுக்கும் சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்குமான நிதி நிலைமைகளை இலகுபடுத்துவதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.