ஈரானின் பாடசாலை மாணவிகள் 650 பேருக்கு வேண்டும் என்றே விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் பிபிசி செய்திச்சேவை இந்த தகவல்களை உறுதியாக வெளியிட்டுள்ளது.
அதிர்ஷடவசமாக மாணவிகள் உயிரிழக்கவிட்டாலும் பலர் உடல் ரீதியான பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஈரானில் உள்ள பாடசாலைகளை மூடவைக்க குறிப்பாக பெண்கள் பாடசாலைகளை மூடவைக்க சிலர் வேண்டும் என்றே செய்த சதியாக இது இருக்கலாம் என ஈரான் சுகாதாரத்துறை பிரதி அமைச்சர் யூனுஸ் பனாஹி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என அந்நாட்டு சட்டமா அதிபர் இந்த தகவல் குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விஷம் அங்குள்ள சாதாரண சந்தைகளில் கிடைக்கக் கூடியது எனவும் இதனால் மக்கள் மிகுந்த குழப்பத்துக்கு ஆளாகியுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத நம்பிக்கைகளை அதீதமாக பின்பற்றும் “கொமி” என்ற நகரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதோடு பிற 8 நகரங்களிலும் மாணவர்களுக்கு இவாறு விஷம் கொடுக்கப்பட்டுள்ளது.
2022 நவம்பர் 30 ஆம் திகதி “கொமி” நகரில் உள்ள பாடசாலை ஒன்றின் 18 மாணவர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் இருந்து சுமார் 10 பெண்கள் பாடசாலை மாணவிகளுக்கு இவ்வாறு விஷம் கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் மட்டும் பெண்கள் பாடசாலை ஒன்றின் மாணவிகள் 100 பேருக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளது என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த விஷ தாக்குதலுக்கு காரணம் என்ன?
தலையை மறைத்து ஹிஜாப் அணியவில்லை என்ற குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்ட அமீனி என்ற யுவதி கடந்த 2022 செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி உயிரிழந்தார்.
அதன் பின்னர் நாடளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்றன. இந்த போராட்டங்களில் ஈரானிய பெண்கள் ஹிஜாபை கழற்றி எரிந்து எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
அவ்வாறே பாடசாலை மாணவிகள் பலரும் தங்கள் ஹிஜாபை கழற்றி எதிர்ப்பை வெளியிட்ட காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன. இந்த போராட்டங்களுக்கு பாடசாலை மாணவிகளின் பங்கு பாரிய அளவில் இருந்தது என்றே கூறப்படுகின்றது.
அமீனி கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து ஷீயாக்களின் கோட்டை என கூறப்படும் “கொமி” நகரத்தில் மத தலைவர்களின் ஆதிக்கம் மீதான மக்களின் விரக்தி அதிகரிக்க ஆரம்பித்தது.
எனவே அந்த சம்பவத்துக்கு பலி தீர்க்கவே இவாறு பாடசாலை மாணவிககளுக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாக ஈரானின் பல முக்கியஸ்த்தர்கள் கூறி வருகின்றனர்.
எவ்வாறாயினும் இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்கின்றன.