தானும் தனது குடும்ப உறுப்பினர்களும் முறைகேடாகச் சம்பாதித்த சொத்துக்கள் குறித்த குற்றச்சாட்டை நிரூபித்தால் குறித்த சொத்துக்கள் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சத்தியக் கடதாசிகள் மூலம் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில் தானும் தனது குடும்ப உறுப்பினர்களும் குற்றவாளிகள் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“ஒரு நல்லாட்சி அரசாங்கம் வந்தது அதில் அநுர குமாரவும் இருந்தார், சஜித் பிரேமதாசவும் இருந்தார், அதில் எங்கள் ஜனாதிபதியும் இருந்தார்.
எங்கள் கணக்குகளைக் கண்டுபிடிக்க உலகம் முழுவதும் சென்றார்கள். ரஞ்சன் ராமநாயக்க டுபாய் மேரியட் ஹோட்டலுக்குச் சென்று, இது நாமலின் ஹோட்டல் என்றார்.
ராஜபக்சவிடம் இவ்வாறான சர்வதேச கணக்குகள் இருப்பதாக எங்கும் உறுதிப்படுத்தப்படவில்லை என தற்போதைய ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அன்று சொன்ன பொய்யை இன்றும் அதே போன்று மீண்டும் கூறுகின்றனர். கோப்புகளை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. கோப்புகளின் மூட்டைகளை மறைக்க வேண்டிய அவசியமும் இல்லை. தங்களிடம் ஆதாரம் இருந்தால், அதை நிரூபியுங்கள், என் பெயரில் அல்லது நம் குடும்பத்தில் யாரேனும் பெயரில் பத்திரம் இருந்தால், உலக நாடுகளில் உள்ள கோப்புகளை மறைத்து கொண்டு வர வேண்டாம்.
சத்தியப்பிரமாணப் பத்திரத்தில் எழுதுவோம். உகண்டாவுக்கு பணம் அனுப்பினார்.. அப்பட்டமான பொய். அதிகாரத்தைப் பெறுவதற்காக பொய் சொல்கிறார்கள். பொய் சொல்ல ஒன்றுமில்லை. அவ்வாறான காரணிகள் இருந்தால் அவற்றை அரசாங்கத்திடமும் நாட்டிடமும் ஒப்படைக்க நாம் தயாராக உள்ளோம்” என்றார்.