மாணவர் தலைவர் வசந்த முதலிகேவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக சட்டத்தரணி நுவான் போபகே தெரிவித்தார்.
பத்தரமுல்ல, இசுறுபாயவில் கல்வி அமைச்சுக்குள் பலவந்தமாக நுழைந்த குற்றத்திற்காக முதலிகே மற்றும் 56 பேர் மீது நேற்று(23) பொலிஸார் கைது செய்து குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி நுவான் போபகே;
கைதானவர்களை மேல் மாகாணம் முழுவதும் உள்ள பல பொலிஸ் நிலையங்களுக்கு மாற்றுவது பொலிஸ் காவலில் உள்ளவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு குறித்து சந்தேகத்தை எழுப்புவதாகக் கூறினார்.
மேலும், வசந்த முதலிகே மற்றும் பலர் கடுமையாக தாக்கப்பட்டதாகவும்,போபகே குற்றம் சாட்டினார்.
பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழக மாணவர்கள் வசந்த முதலிகே தலைமையிலான அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் (IUSF) உறுப்பினர்களுடன் இணைந்து பல்கலைக்கழகத்தை மீண்டும் திறக்குமாறு கோரினர்.
பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகம் பாலியல் துன்புறுத்தல், போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் புதிய மாணவர்களை கொடுமைப்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகள் வெளிவந்ததை அடுத்து முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது.
பல்கலைக்கழக நிர்வாகம் முப்பதுக்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை இரத்து செய்ததுடன், விடுதியில் தங்கியிருந்த மாணவர்களை விடுதி வளாகத்தை விட்டு செல்லுமாறும் அறிவிப்புகளையும் வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.