நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மருந்துப் பற்றாக்குறைக்கு இன்னும் சரியான தீர்வு காணப்படவில்லை எனவும், மருத்துவ சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
சுகாதார அமைச்சின் மருந்துக் கடைகளிலும் பிராந்திய மருந்துக் கடைகளிலும் மிகக் குறைந்த அளவே மருந்துகள் காணப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் மருந்துத் தட்டுப்பாடு மோசமடைந்துள்ளதுடன் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரிகள் உள்ளிட்ட சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சுமார் 1,300 வகையான மருந்து வகைகள் உள்ள போதிலும் 140 முதல் 150 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நீரிழிவு நோயாளிகளுக்கு வழங்கப்படும் இன்சுலின், இதய நோயாளிகளுக்கு வழங்கப்படும் அஸ்பிரின், மெட்ஃபோர்மின், சிறு குழந்தைகளுக்கு வழங்கப்படும் சிரப்கள், அடிப்படை நுண்ணுயிர் எதிர்ப்பிகள், வலிநிவாரணிகள், மயக்க மருந்துகள், புற்றுநோய் மருந்துகள் மற்றும் சிறுநீரகத்திற்கு வழங்கப்படும் மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்க வைத்தியர் நிஷாந்த சமரவீர;
“அவசர சிகிச்சை முதல் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் வரை, மருந்துகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த மாதத்தில் பெரும்பாலான மருந்துகளின் கையிருப்பு தீர்ந்து போகிறது. இந்த கையிருப்புகளை மாற்றுவதற்கு அரசு தலையீடு மிகவும் குறைவு.
மூக்கில் செருகப்படும் குழாய்கள், சிறுநீர்க் குழாய்கள், கேனுலாக்கள், இரத்தம் எடுக்கத் தேவையான ஊசிகள் ஆகியவற்றுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எலும்பு முறிவு மற்றும் முதுகுத் தண்டு அறுவை சிகிச்சைக்கான உபகரணங்கள் பற்றாக்குறையாக உள்ளது.
இதன் காரணமாக முதுகுத் தண்டு தொடர்பான அறுவை சிகிச்சைகள் பெரும்பாலானவை மருத்துவமனையில் நிறுத்தப்பட்டுள்ளன. தேவையான மருந்துகள் இல்லாததால் நோயாளி இறக்கிறார். சுகாதார அமைச்சின் பொறுப்பாக 322 பில்லியன் ரூபாவை ஒதுக்கினோம் என்று கூறுவதில் பயனில்லை.
உண்மையிலேயே அந்தத் தொகையை ஒதுக்கி, இந்த இக்கட்டான தருணத்தில் உயிர் வாழத் தேவையான மருந்துகளைக் கூட அனுப்புங்கள்.”
இவ்வாறானதொரு பின்னணியில் மருத்துவ ஆலோசனையின் பேரில் பிற்போடக்கூடிய சத்திரசிகிச்சைகளை சிறிது காலத்திற்கு ஒத்திவைக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று (12) அறிவித்தார்.