வடமேற்கு மாகாண ஆளுநர் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் இரகசிய காணொளி காட்சி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஆளுநரால் பொலிஸ் மா அதிபரிடம் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குருநாகல் நகரின் குருநாகல் ஏரியில் அமைந்துள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லம், ஆளுநர் அலுவலகத்தில் இருந்து உத்தியோகபூர்வ இல்லத்திற்கு செல்லும் வீதி, அதற்கு முன் சென்ற வாகனம் என்பன சிலரால் காணொளியில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த காணொளி காட்சிகளும் ஒரு தனி நபர் ஒருவரால் வழங்கப்பட்டுள்ளது.
ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பான காணொளிகள், அதனை அடுத்துள்ள குருநாகல் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து எடுக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.
குருநாகல் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உபுல் சந்தன அபேசிங்க தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இல்லாத போது யாரோ ஒருவரால் இந்த காணொளிகள் எடுக்கப்பட்டதாக ஆளுநரிடம் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், இது தொடர்பில் அவசர விசாரணை நடத்துமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அறிவித்திருந்த போதும், மந்த நிலையில் விசாரணைகள் இடம்பெறுவதால், வடமேல் மாகாண ஆளுநர் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.
அதன்படி, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிலைமையை கருத்திற் கொண்டு வடமேல் மாகாண ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமக்கு அறியக் கூடியதாக உள்ளது.