அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட இரு பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி மேலதிக விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்த வழக்கு இன்று (09) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இன்று (09) பிரதிவாதிகளான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி பண்டார ஹீன்கெந்த ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
பிரதிவாதி கோரிய ஆவணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பல அரச நிறுவனங்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை வௌியிட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு ஊடகத்துறை அமைச்சராகப் பணியாற்றிய போது, தனது தனிப்பட்ட கைப்பேசி கட்டணமாக சுமார் இரண்டு இலட்சம் 30 ஆயிரம் ரூபாவை அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் நிதியில் இருந்து செலுத்தியதன் ஊடாக அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட இரு பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.