பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளை 40 நாடுகள் புறக்கணிக்கக்கூடும் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ரஷ்ய, பெலாரஸ் வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டால், பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிப்பதாக உக்ரைன் எச்சரித்திருந்தது.
இந்நிலையில், சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தினால் வௌியிடப்பட்டுள்ள அறிவிப்பை போலந்து, லித்துவேனியா, எஸ்டோனியா, லட்வியா ஆகிய நாடுகள் கூட்டாக நிராகரித்துள்ளன.
இதனையடுத்து, சுமார் 40 நாடுகள் வரை ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிக்கக்கூடும் எனவும் அவ்வாறு இடம்பெற்றால், ஒலிம்பிக் நிகழ்வுகள் அர்த்தமற்றதாகும் எனவும் போலந்தின் விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்திற்கு முன்னர் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் திட்டங்களைத் தடுப்பதற்கு ஆதரவளிக்க பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் கனடா உள்ளிட்ட 40 நாடுகளின் கூட்டணியை உருவாக்க முடியும் என நம்புவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.