சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதியைப் பெறுவதற்கு சீனா வழங்கும் கடன் உத்தரவாதம் போதுமானதல்ல என அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் தெரிவித்துள்ளார்.
விக்டோரியா நூலண்ட் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் இணைந்து கொண்டு இதனை தெரிவித்தார்.
கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டுமாயின், சர்வதேச நாணய நிதியத்தின் நம்பிக்கைக்கு அமைவான சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிடுகின்றார்.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனை பெற்றுக்கொள்வதற்கு அமெரிக்கா தொடர்ச்சியாக உதவிகளை வழங்கும் எனவும் அவர் உறுதி வழங்கியுள்ளார்.
இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பு விடயத்தில் இந்தியா வலுவான அர்ப்பணிப்பை செய்துள்ளதாக கூறிய அவர், சீனா அவ்வாறு செய்யவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நம்பிக்கையை வெற்றிக்கொள்ளும் வகையிலான சான்றிதழை சீனா வழங்கும் என தான் எதிர்பார்ப்பதாகவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் தெரிவித்துள்ளார்.