இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், அதிலிருந்து மீள்வதற்கு சுற்றுலாத்துறை உள்ளடங்கலாக நாட்டிற்கு வருமானம் ஈட்டித்தரக்கூடிய துறைகளை மேலும் வலுப்படுத்தி ஊக்குவிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வருடத்தில் இலங்கைக்கு இந்தியாவிலிருந்து அதிக எண்ணிக்கையான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்திருப்பதாக ஜெட்விங் ட்ரவெல்ஸின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஷிரோமல் ஹுரே தெரிவித்துள்ளார்.
எமது பொருளாதாரத்திற்குப் பெருமளவில் பங்களிப்புச்செய்யும் நாடாக இந்தியா காணப்படுமென நான் நம்புவதுடன் தற்போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் பல்வேறு நேர்மறையான நகர்வுகள் பெரிதும் வரவேற்கத்தக்கவையாகும்’ என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கு கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் வரையான காலப்பகுதியில் அதிக எண்ணிக்கையான ரஷ்ய சுற்றுலாப்பயணிகள் வருகைதந்திருந்த போதிலும், கடந்த ஆண்டு முழுவதும் நாட்டுக்கு வருகைதந்த சுற்றுலாப்பயணிகளில் பெரும் எண்ணிக்கையானோர் இந்திய பிரஜைகள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு இலங்கைக்கு வருகைதந்த 719,978 சுற்றுலாப்பயணிகளில் 123,004 பேர் இந்திய பிரஜைகள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.