திருடர்கள் தண்டிக்கப்படுவார்கள் என சிலர் சொல்கிறார்கள் எனவும், அவ்வாறு சொல்லும் தரப்பினர் அதனை எவ்வாறு நிறைவேற்றுவதென சொல்வதில்லை எனவும், இதனை நிறைவேற்றுவதற்கு முறைமையொன்றினை ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
தீர்வற்ற நாட்டிற்கு தீர்வு எனும் கருப்பொருளில் குருணாகல் சத்தியவாதி மைதானத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதலில் ஈடுபட்ட அனைவருக்கும் எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இதில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடைய எவரையும் தப்பிக்க இடமளிக்க மாட்டோம் எனவும் தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதலுடன் எவ்வகையிலேனும் தொடர்புடைய எவருடனும் அரசியல் பயணம் இல்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், எந்த சூழ்நிலையிலும் எந்த சந்தர்ப்பத்திலும் அவர்களை ஆட்சியில் ஈடுபடுத்த மாட்டோம் எனவும் அவர் தெரிவித்தார்.
இன்று கடைத்தெருக்களுக்கு வரும் சில குழுக்கள் அவர்களும் ஒரே மாதிரியானவர்கள் இவர்களும் ஒரே மாதிரியானவர்கள் என்று கூறிக்கொண்டு தாம் வேறு என காட்ட முயலும் சில குழுக்கள் தமது வரலாற்றை மறந்து விட்டதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கத்தில் முதல் தடவையாக அமைச்சரவை அமைச்சர்களாகவும் பிரதி அமைச்சர்களாகவும் இவர்களே பதவியேற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இத்துடன் நின்றுவிடாது இந்நாட்டை வங்குரோத்தாக்கிய ராஜபக்சர்களை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு முன்னோடியான பக்க பலத்தை வழங்கியவர்கள் இவர்களே என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், இந்த பாவத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள அவர்களால் ஒருபோதும் முடியாது எனவும் தெரிவித்தார்.
வரலாற்றில் முதன்முறையாக ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி பிரதிநிதிகள் நியமனமாவார்கள் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அவர்களில் எவருக்கும் மோசடி மற்றும் ஊழல்களை செய்வதற்கு இடமளிக்க மாட்டோம் எனவும் தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபையின் தலைவர் அல்லது உப தலைவர் இணைந்து சட்டவிரோத கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள அனுமதிக்காத வகையில் அனைத்து கிராமங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மேற்பார்வை சபையொன்று நியமிக்கப்படும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,இதற்கு இளைஞர் பிரதிநிதிகள் நியமிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.
உலகில் உள்ளூராட்சி கட்டமைப்பை நிறுவிய நாடுகளுடன் நட்புறவு ரீதியான உள்ளூராட்சி மன்ற நிர்வாக திட்டமொன்றை ஸ்தாபித்தல், ஒவ்வொரு கணமும் மக்கள் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் உள்ளூராட்சி கட்டமைப்புகளை உருவாக்குவதே தனது ஒரே நோக்கமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.