பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தலைமையில் கூடிய அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) பாவனையாளர்களுக்கு நியாயமான விலையில் முட்டையை வழங்குவது உள்ளிட்ட 4 அம்சங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
கடந்த கோப் குழுவில் வழங்கப்பட்ட பரிந்துரைக்கு அமைய வர்த்தக மற்றும் கமத்தொழில் அமைச்சின் செயலாளர்கள், முட்டை தொடர்பான செலவீனங்களை கணக்கில் கொண்டு முட்டைக்கான விலையைத் தீர்மானிக்கும் விலைச் சூத்திரத்தை இங்கு முன்வைத்தனர்.
உள்நாட்டு கோழிப் பண்ணைத்துறை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை கோப் குழு வலியுறுத்தியதுடன், அதிகாரிகளும் இதனை ஏற்றுக் கொண்டனர்.
நாளொன்றுக்கு ஏறத்தாழ 3 மில்லியன் முட்டைக்கான தற்காலிக தட்டுப்பாடு காணப்படுவதாக கோப் குழுவில் வெளிப்படுத்தப்பட்டது. இதற்குத் தீர்வாகக் கோழிப் பண்ணைத் துறையில் துரித நடவடிக்கைகள் எதுவும் இல்லையென இங்கு வருகை தந்திருந்த அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, வாடிக்கையாளர்களைக் கருத்தில் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட அளவு முட்டையை இறக்குமதி செய்ய இணங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
கோப் குழு முன்னிலையில் முன்வைக்கப்பட்ட அனைத்து விடயங்களையும் கருத்தில் கொண்டு, பாவனையாளர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்பது கோப் குழுவின் நிலைப்பாடாக அமைந்தது.
எனவே, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்துப் பொது மக்களுக்குத் தெரிவிக்கவும், கவனத்தில் எடுக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு நடைமுறைத் தீர்வைக் காண்பதில் அனைத்துத் தரப்பினரும் இணைந்து செயற்படுகின்றனர் என்பதை உறுதிப்படுத்துமாறும் கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார பணிப்புரை விடுத்தார்.