தமிழகத்தில் உள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ‘கிம்புலாஎலே குணா’ உட்பட இந்த நாட்டின் 9 பாதாள உலக தலைமைகளை இந்நாட்டுக்கு அழைத்து வருவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று இன்றும் நாளையும் இந்தியா, தமிழகம் செல்லவுள்ளது.
கிம்புலாஎலே குணா என்ற சின்னையா குணசேகரன், கொட காமினி எனும் அழகப்பெரும சுனில் காமினி பொன்சேகா, பும்மா என்ற ஸ்டான்லி கென்னடி பெர்னாண்டோ, அத்துருகிரிய லடியா என்ற தீனமுல்ல கங்கானம் நளீன் சதுரங்க, கெசெல்வத்த தனுக்க, வெள்ளே சுரங்க எனும் கமகே சுரங்க பெர்னாண்டோ, பூகுடிகன்னா எனும் சின்னய்யா திலீபன் (கிம்புலாஎலே குணாவின் மகன்) புஷ்பராஜா எனும் முஹம்மத் அஸ்மின் ஆகிய பாதாள உலக கோஷ்டியினரை ஆகியோர் இந்திய தேசிய புலனாய்வு பிரிவு கைது செய்துள்ள நிலையில் அவர்களை மீளவும் இந்நாட்டுக்கு அழைத்து வருவதற்காக இவ்வாறு இரகசியப் பொலிஸ் குழு இந்தியாவுக்குப் புறப்படவுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர், இவர்களால் மேற்கொள்ளப்படும் பாதாள உலக செயற்பாடுகள், கொலைகள் மற்றும் ஏனைய குற்றச்செயல்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். அத்துடன், அவர்களுக்கு எதிராக ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின் இரகசியப் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பொது மக்களைக் கோருகிறது.
விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கில் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் விசாரணை நடத்துவதற்காக இந்திய தேசிய புலனாய்வு முகமையால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானிய போதைப்பொருள் கடத்தல்காரருடன் தொடர்பு கொண்டதற்காக கைது செய்யப்பட்டு தமிழ்நாட்டிலுள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 9 இலங்கை பாதாள நபர்களில் பெரும்பாலானோருக்கு சர்வதேச சிவப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.