உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பெரும்பான்மையான உள்ளூராட்சி மன்றங்களில் தனித்துப் போட்டியிட்டாலும் சுதந்திர மக்கள் கூட்டமைப்புடனான கூட்டணிக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 218 உள்ளூராட்சி மன்றங்களுக்கு ‘கை’ சின்னத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும், மேலும் 61 நிறுவனங்களுக்கு சுதந்திர மக்கள் கூட்டமைப்பு என்ற ஹெலிகொப்டர் அடையாளத்தின் கீழ் கட்டுப்பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் 62 உள்ளூராட்சி மன்றங்களுக்கு கட்டுப்பணம் செலுத்தாத நிலையில், நாளைய தினம் அவற்றுக்கும் கட்டுப்பணம் செலுத்தவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
வேட்புமனுக்களை கையளித்த பின்னர் கூட்டணியாக இணைந்து செயற்படுவோம் என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, அந்த பிணைப்பில் முறிவு ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார்.
கொழும்பு டார்லி வீதியிலுள்ள ஸ்ரீலங்கா தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இடதுசாரி முற்போக்கு அரசியல் கட்சிகளுடன் இணைந்து சுதந்திர மக்கள் கூட்டமைப்பை உருவாக்கினாலும், வேட்புமனுத் தாக்கல் செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகவும் திரு. சிறிசேன தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அதிக பலம் உள்ள பகுதிகள், மற்ற பகுதிகளில் கூட்டணியாக போட்டியிட வேண்டும்.