நாடு என்ற ரீதியில் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் அதேவேளை, ஒரே கொள்கை கட்டமைப்பிற்குள் செயற்பட்டு அப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
பொது, அரை அரச மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாடு என்ற வகையில் நம்பிக்கையை ஏற்படுத்த முடிந்ததன் மூலம் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையை மேலும் வெற்றியடையச் செய்வதில் அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது. இந்த வருடத்தின் முதல் காலாண்டின் பின்னர் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றமடையும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, 2024ஆம் ஆண்டு இதே நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.