முட்டை இறக்குமதி செய்யப்பட்டால் நாடளாவிய ரீதியாக தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுக்க உள்ளதாக கோழிப்பண்ணையாளர்கள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
முட்டை இறக்குமதிக்கான சர்வதேச அளவில் டெண்டர் கோரும் பணி நேற்று(09) தொடங்கிய நிலையில் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று(10) கோழிப்பண்ணையாளர்கள் பாதுகாப்பு அமைப்பு ஊடக சந்திப்பொன்றினை ஏற்பாடு செய்திருந்தது.
இதில் அதன் அழைப்பாளர் சஞ்சீவ கருணாசேகர கருத்துத் தெரிவிக்கையில்;
“.. உற்பத்தி பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டால் இரு வாரங்களில் முட்டை விலையினை குறைக்க முடியும். அதனால் விரைவாக முட்டை இறக்குமதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள டொலர்களில் முட்டை உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். பின்னர் அதனை விவசாயிகளுக்கு சாதாரண விலைக்கு பகிர்ந்தளியுங்கள். முடிந்தால் அதற்கு அரசு நிவாரணமும் வழங்குங்கள்.
அதை விட்டு விட்டு, முட்டை இறக்குமதிக்கு அரசு தயாராகி, இறக்குமதி செய்து டொலர் மாபியாவுக்கு முயற்சி செய்தால், இன்னும் சில நாட்களில் விவசாய அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து மாவட்ட மட்டமாக போராட்டத்தினை ஆரம்பிப்போம். அவ்வாறு ஆரம்பமாகும் போராட்டமானது ஒன்றிணைந்து எம்பிக்களின் மாளிகைகளை சுற்றிவளைத்து லொறிக் கணக்கில் கூழ் முட்டைகளை கொண்டு வந்து தாக்குவோம்.
ஆதலால், தயவு செய்து முட்டை இறக்குமதி தீர்மானத்தினை அரசு கைவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்..” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நாடளாவிய ரீதியாக இன்று பல இடங்களில் முட்டை விலையானது சுமார் 50 – 54 ரூபாவிற்கு விற்கப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.