உள்ளூராட்சி மன்றங்களான மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளுக்கான தேர்தல் தொடர்பான எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்சிக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை (3) ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை உத்தியோகபூர்வமாக அறிவித்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் கருத்துப்படி, தனக்கு தேர்தல்களில் ஈடுபடுவதற்கு அல்ல, இரண்டு வருடங்களுக்குள் நாட்டை உயர்த்துவதற்காகவே தனக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அந்த ஆணையை மீறிச் செயற்படத் தயாரில்லை என்றும் ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களுக்கு அறிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (3) ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களை சந்தித்தபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்தால் மரபுக்கு அமைவாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் தலைவராக மாத்திரமே தலைமை தாங்கத் தயார் என ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைமையிடம் தெரிவித்திருந்தார்.
அத்தோடு, உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடப் போவதில்லை எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்தால், 40 வீதமான வேட்பாளர்கள் புதிய முகங்களை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் எனவும் அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அறிவித்திருந்தார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட 4,000 பிரதிநிதிகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்றும், மற்ற 4,000 தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்கள் சேவைகளை சம்பளம் அல்லது சலுகைகள் இல்லாமல் இலவசம் என்று அறிவிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.