உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி 11 மாதங்கள் ஆகி விட்டது. ஆனால் இன்னும் போர் முடிவுக்கு வந்தபாடில்லை.
ரஷியாவை எதிர்த்து உக்ரைன் வீரர்களும் போராடி வருகின்றனர். இதன் காரணமாக ரஷியா கைப்பற்றிய சில நகரங்களை உக்ரைன் படை மீண்டும் மீட்டது. ரஷியா தொடர்ந்து நடத்திவரும் மும்முனை தாக்குதலில் உக்ரைனின் பல நகரங்கள் சின்னாபின்னமாகி விட்டன.
பல மாகாணங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதால் லட்சக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த சில நாட்களாக உக்ரைன் தலைநகர் கிவ் மீது ரஷியபடைகள் வான் வழியாகவும், கடல் வழியாகவும் ஏவுகணை மழை பொழிந்து வருகிறது.
குறிப்பாக மின் கட்டமைப்புகள், மின் நிலையங்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டியது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் உக்ரைன் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
அந்த வாழ்த்து செய்தியில் வெற்றி கிடைக்கும் வரை தொடர்ந்து போராட வேண்டும் என தெரிவித்து இருந்தார். இந்த சூழ்நிலையில் புத்தாண்டு பிறந்த அரை மணி நேரத்தில் கிவ் நகரம் மீது ரஷிய படைகள் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதலை நடத்தியது.
இதில் மின் கட்டமைப்புகள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த ஏவுகணை வீச்சில் சேதவிவரம், உயிர் சேதங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.