ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகர் ஆஷு மாரசிங்கவின் வீட்டில் பணியாற்றிய பெண் ஒருவர், தம்மை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக செய்த முறைப்பாட்டிற்கு அமைய, கடந்த டிசம்பர் 21 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வெலிவிட்டியே சந்திரசிறி தேரர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.
ஐந்து இலட்சம் ரூபா சரீரப் பிணையில் தேரரை விடுவிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
வெலிவிட்டியே சந்திரசிறி தேரர் தம்மை பாலியில் ரீதியில் துன்புறுத்தியதாக ஆஷு மாரசிங்கவின் வீட்டில் பணியாற்றிய 33 வயதான பெண் கடந்த 9 ஆம் திகதி பொரளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
குறித்த தேரர், ஆஷு மாரசிங்க மற்றும் ஆதர்ஷா கரந்தான ஆகியோருக்கு சொந்தமானது எனக் கூறப்படும் Global Skills Development Academy என்ற நிறுவனத்தின் ஆலோசகராக செயற்பட்டிருந்தார்.
டிசம்பர் 14 ஆம் திகதி சந்தேகநபரான தேரர் மற்றும் ஆதர்ஷா கரந்தான ஆகியோரிடம் பொரளை பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.
கடந்த டிசம்பர் 21 ஆம் திகதி வெலிவிட்டியே சந்திரசிறி தேரர் மீண்டும் பொரளை பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்ததுடன், இதன்போது தேரர் சாட்சியாளர்களுக்கு அழுத்தம் பிரயோகிக்க சந்தர்ப்பம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.
இதனை அடுத்து புதுக்கடை இரண்டாம் இலக்க பதில் நீதவான் ஷலினி பெரேரா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட தேரர், விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இன்று புதுக்கடை இலக்கம் இரண்டு நீதவான் ரஜிந்திரா ஜயசூரிய முன்னிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், இந்த முறைப்பாடு உண்மைக்கு புறம்பானது என பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர்.